ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நாளைய தினம் நாடாளுமன்றத்தில் ஆற்றப்படும் அக்கிராசன உரை மீது வாக்கெடுப்பை நடத்தக் கோராமல் இருப்பதற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
மாறாக பொதுமக்களுக்கு நன்மையை ஏற்படுத்துகின்ற அரசாங்கத்தின் எந்தவொரு திட்டத்திற்கும் நாடாளுமன்றத்தில் ஆதரவை தெரிவிக்கவும் ஐக்கிய தேசியக் கட்சி முடிவெடுத்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்கட்சித் தலைவருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று மாலை விசேட கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
இந்த சந்திப்புகள் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க, இன்றைய சந்திப்பில் பேசப்பட்ட விடயங்களை தெளிவுபடுத்தினார்.
“எதிர்கட்சியாக நாங்கள் மாறியிருக்கின்ற நிலையில், நாளைய முதாவது சபை அமர்வுக்கான நாடாளுமன்றக் குழுக்கூட்டம் இன்று நடத்தப்பட்டது.
அதுமட்டுமல்ல புதிய எதிர்கட்சித் தலைவராக தெரிவாகவுள்ள சஜித் பிரேமதாஸ மற்றும் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டனர்.
விசேடமாக எதிர்கட்சிப் பிரதம கொறடாவாக என்னை தெரிவு செய்யவுள்ளதாகவும், பிரதி கொறடாவாக ரஞ்ஜித் அளுவிஹாரேயும், ஜே.சி அலுவிஹாரே மற்றும் அஜித் பி.பெரேரா ஆகியோரை தெரிவுசெய்வதாகவும் அறிவிக்கப்பட்டது.
நாளைய தினம் ஜனாதிபதியால் வெளியிடப்படும் அக்கிராசன உரையின் பின்னர் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டு பின் பிற்பகலில் சபை கூட்டப்பட்டு அதன் பின்னர் ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்களை சந்திக்கவும் அங்கு ஜனாதிபதியின் கொள்கை அறிவிப்பு மீதான வாக்கெடுப்பு குறித்து முடிவெடுக்கப்படும்.
அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்டவர்கள் குறித்தும் பேசப்பட்டது. எதிர்கால தேர்தல் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. மிக பலம்வாய்ந்த எதிர்கட்சியாக சபையிலும் வெளியிலும் செயற்படுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
தேர்தல் காலத்தில் மக்களுக்கு இந்த அரசாங்கம் பலவித வாக்குறுதிகளை வழங்கியது. அவற்றை சிறந்த முறையில் அமுல்படுத்த தேவையான ஒத்துழைப்பை நாடாளுமன்றத்தில் வழங்குவோம் என்பதோடு பிழைகளை சுட்டிக்காட்டவும் தயங்கமாட்டோம்” என கூறியுள்ளார்