முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதினை கைது செய்து சட்டநடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் மேலும்பல சஹ்ரான்கள் உருவாவதை தடுக்கமுடியாமல் போய்விடும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
புதிதாக தெரிவாகியுள்ள அரசாங்கத்தில் தாம் இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதினுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கும்வரை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதை நிறுத்தமாட்டேன் என்றும் அவர் கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல் குறித்து விசாரணைகளை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவிடம் இன்று விசாரணை நடத்தியுள்ளது.
சாட்சியமளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“முன்னாள் அமைச்சராக ரிஷாட் பதியூதினை கைது செய்து தண்டனை வழங்காவிட்டால், எதிர்காலத்தில் இன்னும் பல சஹ்ரான்கள் உருவாவதை தடுத்துவிட முடியாது.
உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல்கள் சூத்தரதாரிகளுடன் ரிஷாட் பதியூதீனுக்கு உள்ள தொடர்புகளைத் தெரிவிக்கும் ஆவணங்களை எடுத்துக்கொண்டு நீண்டகாலமாக ஆணைக்குழுக்கள் முன்பாக சென்றுவருகின்றோம்.
ரிஸாட் பதியூதீனுடன் எனக்கு தனிப்பட்ட பிரச்சினை இல்லை. மாறாக எமக்கு வேறு பணிகள் இல்லை என்றோ செலவு செய்வதற்கு அதிக பணம் இருக்கின்றது என்றோ இந்த முயற்சிகளில் நாம் ஈடுபடவில்லை.
எனினும் காரணத்திற்கு மருந்துகட்டாமல் பிரதிபலனுக்கு மருந்துகொடுப்பதில் பிரயோசனமில்லை என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.
சஹ்ரானை பாதுகாத்த, போஷணை செய்த, ஊக்கப்படுத்திய ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படாமலிருந்தால், இந்த சஹரானை கைது செய்து சிறையில் அடைத்து மரண தண்டனை வழங்கினாலும் எதிர்காலத்தில் இன்னும் பல சஹரான்கள் வருவதை தடுக்கமுடியாது.
உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல் சிறிய பிரச்சினையல்ல. 22 மில்லியன் மக்களின் தேசிய பாதுகாப்பு குறித்த பிரச்சினையாகும்.
அரசாங்கம் நீலநிறமாகவும், பச்சை நிறமாகவும் அல்லது வேறெந்த நிறமாக இருந்தாலும் எந்த அரசாங்கத்திலும் நிரந்தர அமைச்சுப் பதவி ஒன்றை வகிப்பவர்.
எனினும் இம்முறை ரிஸாட் பதியூதீன் அரசாங்கத்துடன் இணைவதை எம்மால் தடுக்கமுடிந்தது. ஆகவே அவர்குறித்த விசாரணைகளை சரிவர செய்து தண்டனை வழங்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையில்தான் பல ஆவணங்களையும் எடுத்துவந்து ஆணைக்குழு முன்பாக முன்னிலையாகினேன்.
கடந்த 5 வருடங்களாக நாட்டை கூறுபோட்டவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்டத்தை சரிவர அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என்பதை அவதானித்துக்கொண்டிருப்போம்.
மக்களுக்காக நாங்கள் அரசாங்கத்திற்குள் இருந்து குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை வழங்கப்படுமா என்பதை மக்களைப் போன்று கூர்ந்து அவதானித்துக்கொண்டே இருக்கின்றோம்” என கூறியுள்ளார்.