ஸ்ரீலங்காவில் வாழும் பெரும்பான்மையின சமூகமான சிங்கள பௌத்தர்களின் எதிர்பார்ப்புக்களை மதிக்கும் வகையிலேயே தனது ஆட்சி அமையும் என்று அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் வாக்குறுதி அளித்துள்ளார்.
அதேவேளை நாட்டின் அரசியல் சாசனத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன், தேர்தல் முறைமையிலும் மாற்றத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தனது அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை இன்றைய தினம் நாடாளுமன்றில் முன்வைத்து உரையாற்றிய போதே இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இன்றைய அவரது உரையில் தமிழ் மக்களின் தேசிய பிரச்சனைக்கான அரசியல் தீர்வு உட்பட தமிழ் மக்கள் எதிர்நோக்கிவரும் பிரதான பிரச்சனைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
கடந்த நவம்பர் மாதம் 16ஆம் திகதிஇடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று ஸ்ரீலங்காவின் ஏழாவது நிறைவேற்றுஅதிகாரமுடைய ஜனாதிபதியாக பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ச எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஜனவரி 3 ஆம் திகதியான இன்றைய தினம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற சம்பிரதாயத்திற்கு அமைய கூட்டத்தொடரை ஆரம்பித்து வைக்க வரும் அரச தலைவருக்கு இராணுவ மரியாதை அணிவகுப்பும், 21 மரியாதை வேட்டுக்களும் தீர்ப்பது வழமையாக இருந்துவந்த போதிலும், அந்த சம்பிரதாய நிகழ்வுகள் புதிய ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இன்றைய தினம் இரத்துச் செய்யப்பட்டிருந்தன.
இதற்கமைய எந்தவொரு ஆடம்பர வரவேற்பு நிகழ்வுகளும் இன்றி அதுவும் இதுவரை ஆட்சியில் இருந்த ஜனாதிபதிகள் அணிந்த சிங்கள பௌத்த பாரம்பரிய உடைக்கு பதிலாக மேற்கத்தேய நாகரீக ஆடையுடன் கோட்டாபய ராஜபக்ச அக்கிராசன உரையை நிகழ்த்த நாடாளுமன்றம் சென்றிருந்தார்.
இந்த நிலையில் ஸ்ரீலங்கா நாடாளுமன்றின் அக்கிராசனத்தில்அமர்ந்த அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, “சுபீட்சத்தின் நோக்கு” என்ற தனது அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை நாடாளுமன்றில் முன்வைத்தார்.
குறுகிய அரசியல் லாபங்களுக்காக இனவாதத்தை விதைத்துவரும் அரசியல்வாதிகள் அவற்றை கைவிட்டு நாட்டை முன்னேற்ற முன்வர வேண்டும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி அழைப்புவிடுத்தார்.
“இந்த நாட்டு அரசியல் கலாசாரத்தில் பிரபல மாற்றத்தை ஏற்படுத்தவே மக்கள் எனக்கு வாக்களித்தனர். விசேடமாக இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கலாசாரத்தை மக்கள் நிராகரித்துள்ளனர். அரசன் என்கிற பாத்திரத்தை பிரதிநிதித்துவம் செய்து நாட்டை ஆட்சிசெய்யும் முறையையும் மக்கள் நிராகரித்துவிட்டனர். ஆகவே சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் இந்த யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். கடந்த காலங்களில் குறுகிய அரசியல் சிந்தனையை அடிப்படையாக வைத்து செய்த அரசியலை இப்போதாவது கைவிட்டு இனங்களுக்கு இடையே பிரிவினையை விதைப்பதற்கு பதிலாக ஒன்றிணைந்து தேசத்தை கட்டியெழுப்பும் பணியில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன்” என்று தெரிவித்தார்.
ஸ்ரீலங்காவின் பெரும்பான்மை சமூகமான சிங்கள பௌத்த மக்களுக்கு எதிராக சென்று எந்தவொரு தீர்மானத்தையும் முன்னெடுக்கத் தான் தயாரில்லை என்பதையும் இன்றைய அக்கிராசன உரையில் ஸ்ரீலங்கா அரச தலைவர் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார்.
தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினையான இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இந்திய அரசும், சர்வதேச சமூகமும் வலியுறுத்திவரும் புதிய அரசியல் சானமொன்றின் ஊடான அதிகாரப் பரவலாக்கலைச் சிங்கள மக்கள் எதிர்ப்பதால் அதனை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் மேற்கொள்ளத் தயாரில்லை என்று ஸ்ரீலங்காஜனாதிபதியாக பதவியேற்றதை அடுத்து கோட்டாபய ராஜபக்ச இதற்கு முன்னரும் பல தடவைகள் பகிரங்கமாக தெரிவித்திருக்கும் நிலையிலேயே நாடாளுமன்றிலும் அந்தக் கருத்தை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இந்த விடயம் பற்றி அவர் குறிப்பிடும் போது,“ பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்புகளை நாம் என்றும் மதிக்க வேண்டும். அப்போதுதான் மக்களின் இறையாண்மையைப் பாதுகாக்க முடியும். எமது நாட்டின் உன்னதமான அரசியல் யாப்பின்படி எனது பதவிக்காலத்தினுள் நாட்டின் ஒற்றையாட்சியைப் பாதுகாப்பேன் என்றும் புத்தசாசனத்தைப் பாதுகாத்து போஷிப்பேன் என்றும் அதேபோன்று எந்தவொரு பிரஜையும் தான் விரும்பிய சமயத்தைப் பின்பற்றும் சுதந்திரத்தை எப்போதும் காப்பேன் என்றும் இதன்போது வெளிப்படுத்த விரும்புகின்றேன்” என்று தெரிவித்தார்.
அதேவேளை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் பிரதானமாக வலியுறுத்தி வந்தது போல் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்என்றும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி குறிப்பிட்டார்.