இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் எட்டாவது நாடாளுமன்றமே எதிர்க்கட்சித் தலைவர்களாக மூன்றுபேர் பதவி வகித்த வரலாற்றைப் பதிவுசெய்துள்ளது.
எட்டாவது நாடாளுமன்றில் கடந்த வெள்ளிக்கிழமை சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டதையடுத்து இந்த வரலாற்றுப் பதிவு இடம்பெற்றுள்ளது.
தற்போதைய நாடாளுமன்றத்தின் 2015இல் இருந்தான பதவிக்காலத்தில் முதல் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தெசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பதவி வகித்தார்.
இதையடுத்து 2018இல் மஹிந்த ராஜபக்ஷ இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். இதையடுத்து சஜித் பிரேமதாச இப்பதவிக்கு தற்பொது மூன்றாவது நபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரத்தில், இலங்கைக்கு 2015 முதல் நான்கு எதிர்க் கட்சித் தலைவர்கள் இருந்துள்ளனர். அதன்படி, 2015 ஜனவரியில் நிமல் சிரிபாலா டி சில்வா குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து இரா.சம்பந்தனும் அடுத்து மஹிந்த ராஜபக்ஷவும் பதவியில் இருந்ததோடு இப்போது சஜித் பிரேமதாச எதிர்க் கட்சிப் பதவியில் அமர்ந்துள்ளார்.
1977இல் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் போது எதிர்க் கட்சித் தலைவரின் பதவி மாற்றப்பட்டு 1988 வரை தொடர்ந்தது.
அதன்படி, எதிர்க் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட மறைந்த சிறிமாவோ பண்டாரநாயக்க 1980இல் தனது குடிமை உரிமைகள் பறிக்கப்பட்ட பின்னர் அவருக்குப் பதிலாக அனுரா பண்டாரநாயக்க நியமிக்கப்பட்டார். இதுவே வரலாற்றுப் பதிவாக இருந்த நிலையில் நேற்று மற்றொரு வரலாறு பதிவானது.
இதற்கிடையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறித்தும் ஒரு பதிவு இடம்பெற்றுள்ளது. அதாவது அவர் நேற்று நாடாளுமன்றத்தில் 43 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக எந்தப் பதவியும் இல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினராக அமர்ந்திருந்தார்.
1977இல் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க அந்த ஆண்டில் இளைய அமைச்சரானார்.
பின்னர் பிரதமரானார். மேலும் அவ்வப்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.