அடுத்துவரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கிற்கு வெளியில் ஏனைய பகுதிகளில் போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருகின்றதே தவிரவும் தற்போது வரையில் இறுதிமுடிவொன்றை எட்டவில்லை என்று அதன் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கிற்கு வெளியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வரும் நிலையில் அதுகுறித்த அடுத்தகட்ட நிலைமைகள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வடக்கு கிழக்கிற்கு வெளியில் போட்டியிடுவது குறித்து கடந்த காலங்களிலேயே முயற்சிகளை எடுத்திருந்தது. அதுகுறித்து கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் அக்காலச்சூழலில் அம்முயற்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியாதது போனதன் காரணமாக அத்திட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் தான் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான ஏது நிலைகள் ஏற்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கிற்கு வெளியில் வாழும் தமிழ் மக்களின் பிரிதிநிதித்துவம் தொடர்பில் கரிசனை கொண்டு தேர்தலில் போட்டியிடுவது பற்றி ஆராய்ந்து வருகின்றோம்.
எனினும் வடக்கு கிழக்கிற்கு வெளியில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளுக்கு பாதகமில்லாத வகையில் எமது தேர்தல் போட்டி இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கின்றோம்.
ஆகவே அதுகுறித்த சாதக, பாதக நிலைமைகள் தொடர்பில் பரிசீலித்து வருகின்றோம். இன்னமும் இறுதியான முடிவுகள் எவையும் எடுக்கப்படவில்லை.
மேலும் கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டால் மனோகணேசனுக்கு இரண்டு வழியில் தாக்கத்தினை ஏற்படுத்தும். ஓன்று அவரது வெற்றி வாய்ப்பினை குறைப்பதாக இருக்கும் மற்றையது, அவருடன் கூட்டமைப்பும் இணைந்து வியூகம் வகுத்து பயணிக்கின்றபோது இரு தமிழ் பிரதிநிதித்துவங்களை பெறுவதற்கான வாய்ப்பினையும் ஏற்படுத்தலாம்.
ஆகவே அடுத்துவருகின்ற காலத்தில் தேர்தல் முறைமை, வாக்களர் எண்ணிக்கை என்பவற்றையும் கவனம் செலுத்தி ஆராய்வுகளைச் செய்வதோடு இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இறுதியான முடிவுகளை எடுப்போம் என்றார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்க கிழக்கிற்கு வெளியில் போட்டியிடுதல் தமிழ் பிரதிநிதித்துவங்களை அதிகரித்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு விரைவில் கூடி முடிவெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.