தமிழர்களின் ஆதரவு சரியத் தொடங்கியதாலேயே வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே தமது தேசிய பட்டியல் ஆசனத்தை தக்க வைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் பணிகளை முன்னெடுக்க தொடங்கி உள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு தமிழர்களின் இருப்பை கேள்வியாக்கி விட்டு எதிர்வரும் தேர்தலில் வடக்கு, கிழக்கிற்கு வெளியிலும் போட்டியிடவுள்ளமை அங்குள்ள தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் முயற்சியே.
கிழக்கு மாகாணத்தில் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெறுக்க தொடங்கி விட்டார்கள். மாற்று தலைமைகளை தேடத்தொடங்கி விட்டார்கள். வடக்கிலும் இதே நிலை தான்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் ஆதரவு சரிய தொடங்கி விட்டது.
இந்த நிலையில் தான் தற்போது அவர்கள் வடக்கு, கிழக்கிற்கு வெளியே தமது தேசிய பட்டியல் ஆசனத்தை தக்க வைப்பதற்காக அரசியல் பணிகளை முன்னெடுக்க தொடங்கியுள்ளனர்.
மக்களுக்காக அரசியல் பணியாற்ற வருபவர்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும். தங்களின் இருப்பை தக்க வைப்பதற்காக வாக்குகளை பயன்படுத்த கூடாது.
வடக்கு, கிழக்கிற்கு வெளியிலுள்ள மக்களை நிம்மதியாக வாழவிட்டால் அது பெரும் உதவியாக இருக்கும் என கூறியுள்ளார்.