முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணி, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிறைகுடம் சின்னத்தில் களமிறங்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
தமிழ் மக்கள் கூட்டணியென்ற பெயரில், நிறைகுடம் சின்னத்தில் களமிறங்கும் ஆலோசனைகள் நடந்து வருகிறது.
ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் பூ சின்னத்தை மாற்றி, நிறைகுடம் சின்னமாக்கி, கட்சியின் பெயரை தமிழ் மக்கள் பேரவை என மாற்றி தேர்தலில் களமிறங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கட்சியின் பெயர், சின்னத்தை மாற்றுவது தொடர்பாக, தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரை, கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் நேரில் சந்தித்து பேச்சு நடத்தியதாக தெரிய வருகிறது.
இதேவேளை, தமிழ் மக்கள் கூட்டணியின் ஆசனப்பங்கீட்டு பேச்சுக்கள் இன்னும் குழப்பத்தில் உள்ளது. கூட்டணியின் யாழ் மாவட்ட ஆசன பங்கீட்டிலேயே குழப்பம் நீடிக்கிறது.
முன்னர் யாழ் மாவட்டத்தில் 4 ஆசனங்களை கோரிய விக்னேஸ்வரன், தற்போது 5 ஆசனங்களை கோரியுள்ளார். ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் தமிழ் தேசிய கட்சி ஆகியனவும் தலா 3 ஆசனங்களை யாழில் கோரியுள்ளன. இதனால் யாழ் மாவட்ட ஆசனப்பங்கீட்டில் குழப்பம் நீடிக்கிறது.
தமிழ் மக்கள் கூட்டணியை ஆரம்பித்தபோது, வேட்புமனு தருவதாக பலரிடம் வாக்களித்து விட்டதாகவும், அவர்களிற்கு வேட்புமனு வழங்க வேண்டுமென்றும் விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். எனினும், 3 ஆசனங்களை ஒதுக்காத பட்சத்தில், கூட்டணியிலிருந்து வெளியேறப் போவதாக, கடந்த சந்திப்பில் உறுதியாக தெரிவித்திருந்தது.
இதேவேளை, தமிழர் விடுதலைக் கூட்டணியுடனும் ஒரு கூட்டணி தொடர்பான பேச்சுக்களை தமிழ் தேசிய கட்சி நடத்தி வருகிறது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தில் களமிறங்கலாமென சிறிகாந்தா தரப்பினால் யோசனை முன்வைக்கப்பட்டபோதும், அதை விக்னேஸ்வரன் நிராகரித்ததாக தெரிகிறது.
மார்கழி மாதத்தில் எந்த காரியத்தை செய்யும் வழக்கம் விக்னேஸ்வரனிடம் இல்லை. அது அவரது நம்பிக்கை சார்ந்த விடயம்.
இதனால், கூட்டணி உடன்படிக்கை கைச்சாத்திடுவதை தை மாதம் வரை தள்ளி வைத்துள்ளார். தைப்பொங்கல் தினத்தின் பின்னர், தமிழ் புதுவருடம் பிறந்ததும், அடுத்தடுத்த நாட்களில் கூட்டணி உடன்படிக்கை கைச்சாத்தாகும்.
விக்னேஸ்வரனின் அறிவிப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு குடைச்சலைக் கொடுத்திருப்பதாக கூறும் அரசியல் அவதானிகள் யாழ் தேர்தல் மாவட்டத்தில் கூட்டமைப்பின் பலம் இம்முறை நாடாளுமன்றத்தில் 05 ஆக உள்ள நிலையில் 2020ம் அண்டு தேர்தலில் 03 ஆசனங்களுடன் மட்டுப்படுத்தப் படலாம் என கூறப்படுகிறது.
வழமை போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்முறை நாம் 06 ஆசனங்களை வெல்வோம் என மார்பு தட்டவார்கள் ஆனால் அந்த கணக்கு பிழைக்கும் என பரவலாக கூறப்படுகிறது.