உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டை கொண்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் உள்ளிட்டவர்களை விரைந்து கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிங்களே தேசிய அமைப்பின் தலைவரான அக்மீமன தயாரத்ன தேரர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்றைய தினம் முன்னிலையாகியிருந்த தயாரத்தன தேரர், வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து ரிஷாட் பதியூதீன், அசாத்சாலி, முஜிபுர் ரஹ்மான் மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோருக்கு எதிராக நாங்கள் பொலிஸ்மா அதிபருக்கு முறையிட்டிருந்தோம்.
அதுதொடர்பில் மேலதிக வாக்குமூலம் பெறுவதற்காகவே குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்திருந்தார்கள். 04வது முறையாக இன்று வந்துள்ளோம்.
சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் திரட்டி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம்.
விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவாக ஆர். சம்பந்தன் செயற்பட்டது போல சஹ்ரானின் ஐ.எஸ் தீவிரவாதிகளின் அரசியல் பிரிவுகளாக ரிஷாட் போன்றவர்கள் செயற்படுகின்றனர். அதனால் அவர்களை உடனடியாக கைது செய்யும்படி வலியுறுத்தியுள்ளோம்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கிய குறிப்பாக மாவனெல்ல பகுதியில் புத்தர் சிலையை சேதப்படுத்தியபோது தீவிரவாதமே தலைதூக்கப் போகிறது என்றும் ஐ.எஸ் தீவிரவாதிகள் வரப்போவதாகவும் அமைதி சீர்குலையப்போவதாகவும் நாங்கள் தகவல் வெளியிட்டோம்.
ஆனால் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டபோது, அவர்களை விடுவிக்க அசாத்சாலி உதவியிருக்கின்றார். அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஆகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு ரணில் விக்கிரமசிங்கவும், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுமே முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும்” அவர் வலியுறுத்தியுள்ளார்.