புதிய ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் அபிவிருத்தி தொடர்பில் அதிக கரிசனை செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், அரசியல் தீர்வு தொடர்பில் எந்தவித அக்கறையும் செலுத்தப்படவில்லை.
இது தொடர்பில் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளில் நாம் சுட்டிக்காட்டுவோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரை நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
அதன்பின்னர் அங்கு புதிய ஜனாதிபதிக்கும், முன்னாள் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது. இந்த இரண்டு விடயங்கள் தொடர்பிலும் வினவிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு மக்களின் ஜனநாயக ஆணைக்கு மதிப்பளித்து புதிய ஜனாதிபதி செயற்பட வேண்டும். ஜனநாயக விழுமியங்களுக்கு ஒவ்வாத நடவடிக்கைளில் அவர் ஈடுபடக்கூடாது.
மூவின மக்களையும் அவர் அரவணைத்துப் பயணிக்க வேண்டும். சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று இன ரீதியிலும், மத ரீதியிலும், மொழி ரீதியிலும் அவர் வேறுபாட்டைக் காட்டக்கூடாது. இதை நாடாளுமன்றில் வைத்து புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் நான் நேரில் தெரிவித்துவிட்டேன்.
நாட்டின் அபிவிருத்திகளால் மூவின மக்களும் பயனடைய வேண்டும். அதேவேளை, அரசியல் தீர்வும் காணப்பட வேண்டும்.
பிரிக்க முடியாத ஒருமித்த நாட்டுக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வுடன் மூவின மக்களும் ஏற்கும் தீர்வே வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.