ஐரோப்பிய நாடுகளிற்கு சட்டவிரோதமாக நுழையும் முயற்சியில் முகவர்களால் ஏமாற்றப்பட்ட 140 பேர் தென்னிந்தியாவில் நிர்க்கதியாக வாழ்கிறார்கள். கடந்த வருடத்தில் மட்டும் முகவர்களால் ஏமாற்றப்பட்டவர்களின் தொகை இது என வடக்கு கிழக்கு சமூக நல்லிணக்க அமைப்பு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு கனவில் உள்ளவர்களை குறிவைத்து செயற்படும் வெளிநாட்டு முகவர்களிடம் ஏமாற வேண்டாமென்றும் தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பின் தலைவர் தி.அருட்செல்வம் இது குறித்து தெரிவிக்கையில்,
தமிழகத்தின் அகதி முகாம்களிலும், வெளியிலும் 120,000 பேர் வசிக்கிறார்கள். இதில் சொந்த இடத்திற்கு திரும்பி வர விரும்பினாலும், சட்டச்சிக்கல்கள் காரணமாக திரும்பி வர முடியாமல் உள்ளவர்கள் தொடர்பில் எமது அமைப்பு கவனம் செலுத்தி வருகிறது.
நாம் திரட்டிய தரவுகளின்படி, வெளிநாடு செல்ல முற்பட்டு முகவர்களால் மாற்றப்பட்டு 140 பேர் தென்னிந்தியாவில் நிர்க்கதியான நிலையில் உள்ளனர். இவர்கள் கடந்த வருடம் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் ஊடாக ஐரோப்பிய நாடுகளிற்கு அழைத்து செல்வதாக கூறியே இவர்கள் அழைத்து வரப்பட்டனர். தமிழகத்திலும், அயல் மாநிலமொன்றிலும் இவர்கள் அழைத்து வரப்பட்டு நிர்க்கதியாக்கப்பட்டனர். 6 – 25 இலட்சம் வரையான பணத்தை முகவர்கள் பெற்றுள்ளனர்.
இவ்வாறு ஏமாற்றப்பட்டவர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், புத்தளத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.
தற்போது இந்தியாவில் குடிவரவு, குடியகல்வு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளது. எனவே, இவ்வாறான முகவர்களிடம் ஏமாற வேண்டாம். கடந்த 3 மாதத்தில் ஏமாற்றப்பட்ட 15 பேரை நாட்டுக்கு அழைத்து வந்துள்ளோம் என்றார்.