சர்வதேச நாணய நிதியத்திற்கு பயந்தே தற்போதைய அரசாங்கம் எரிபொருள் தொடர்பான விலை சூத்திரத்தை தொடர்ந்தும் அமுல்படுத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் விலை சூத்திரத்தை அமுல்படுத்தி வருகிறது. எமது அரசாங்கம் அமுல்படுத்திய போது, விலை சூத்திரத்தை கூறி சிரித்தனர்.
உண்மையில் ஏன் அரசாங்கம் விலை சூத்திரத்தை அமுல்படுத்துகிறது?. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றவே விலை சூத்திரம் அமுல்படுத்தப்படுகிறது என்பது தெளிவானது.
சர்வதேச நாணய நிதியம் எதிர்வரும் மார்ச் மாதம் இந்த விலை சூத்திரம் மற்றும் நாட்டின் நிலைமைகள் தொடர்பாக மதிப்பீடுகளை செய்யும்.
அப்போது எரிபொருள் விலை தொடர்பான சூத்திரம் அமுலில் இருக்கவில்லை என்றால் நாணய நிதியம் எமது செயற்பாடுகளில் இருந்து விலகிக்கொள்ளும். இந்த அஞ்சம் காரணமாகவே அரசாங்கம் எரிபொருள் விலை சூத்திரத்தை அமுல்படுத்துகிறது.
அதேவேளை பெறுமதி சேர் வரி போன்றவை குறைக்கப்படடதால், அத்தியவசிய பொருட்களின் விலைகள் குறித்து வாழ்க்கை நிலைமை இலகுவாகும் என நாட்டு மக்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் பொருட்களின் விலைகள் கட்டுப்படுத்த முடியாதளவுக்கு அதிகரித்துள்ளன. நாட்டின் ஜனாதிபதி, கடைக் கடையாக சென்றால் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த முடியுமா?.
நடைமுறை மாற்றம் என்பது இதுவல்ல. பிரதான அபிவிருத்தி திட்டங்கள் அனைத்து எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக நேற்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இதற்காக எமது அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தி பயனில்லை. எப்போது வேண்டுமானாலும் வரவு செலவுத் திட்டத்தை கொண்டு வாருங்கள், நாங்கள் ஆதரவளிப்போம் என பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.