முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் குமாரசிங்க சிறிசேன, இலங்கை டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்த பதவி விலகல் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளதாக டெலிகொம் நிறுவனத்தின் செயலாளர் கொழும்பு பங்குச் சந்தைக்கு அறிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் அரச நிறுவனங்களில் தலைவர் பதவிகளை வகித்த அனைவரையும் பதவி விலகுமாறு புதிய அரசாங்கம் கடந்த நவம்பர் மாதம் அறிவித்திருந்தது. ஏனைய நிறுவனங்களின் தலைவர்கள் பதவி விலகிய போதிலும் குமாரசிங்க சிறிசேன பதவி விலகவில்லை.
அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்குமாறு டெலிகொம் நிறுவனத்தின் தொழிற்சங்கங்கள் அண்மையில் கடும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தன.
அதேவேளை டெலிகொம் நிறுவனத்தின் தலைவருக்கு 10 லட்சம் ரூபாய் மாத சம்பளமாக வழங்கப்பட்டு வந்ததுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதனை இரண்டரை லட்சமாக குறைக்க உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.