நாட்டிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று கூறி நாட்டு மக்களை அச்சுறுத்தி வந்த அமெரிக்காவுடனான மில்லேனியம் சவால் ஒப்பந்தம் உட்பட ஏனைய ஒப்பந்தங்களை தைரியம் இருந்தால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் எதிர்வரும் சுதந்திர தினத்தன்று கிழித்தெறிய வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார்.
அமெரிக்காவுடனான எம்.சி.சி, எக்ஸா மற்றும் சோபா ஒப்பந்தங்கள் மற்றும், சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஆகியவற்றை இரத்து செய்வதற்கான யோசனையை ராஜபக்ஷ அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்பித்தால் அதற்கு முழுமையான ஆதரவை எதிர்கட்சியான ஐக்கிய தேசிய முன்னணி வழங்கும் என்றும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனவரி 3 ஆம் திகதி எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து அக்கிராசன உரை என்று அழைக்கப்படும் தற்போதைய ராஜபக்ஷ அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையை ஆற்றியிருந்தார்.
அரச தலைவரின் இந்த உரை தொடர்பான விவாதம் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் ஆரம்பமானது. இதற்கான ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட முன்வைத்திருந்தார்.
இதற்கமைய விவாதத்திற்கான பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாட்டிற்கு ஆபத்து என்று கூறிய அனைத்து சர்வதேச ஒப்பந்தங்களையும் கிழித்தெறியுமாறு ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு ஆலோசனை முன்வைத்தார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த நாட்டு மக்களின் ஆணைக்கு தலைசாய்ப்பதே சபையிலுள்ள அனைவரது கடமையாகும். அதன்படி 69 இலட்சம் மக்கள் வழங்கிய ஆணையை அமுல்படுத்துவதற்காக மூன்றில் இரண்டு அல்ல, ஆறில் ஐந்தும் அல்ல, சபையிலுள்ள 225 உறுப்பினர்களது ஆதரவையும் வழங்க தயாராகவே இருக்கின்றோம். அதற்காக பொதுத் தேர்தல்வரை காத்திருக்கவும் தேவையில்லை.
அதேவேளை அரச தலைவர் கோட்டாபயவின் கொள்கை விளக்கத்தில் குறிப்பிட்ட மக்களின் மகிழ்ச்சி சுட்டியயையும் கோடிட்டுக் காட்ட விரும்புகின்றேன்.
உண்மையில் நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இருந்த பொருட்கள் – சேவைகளின் விலைகளையும் இப்போது உள்ள விலைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது விண்ணை தொடும் அளவுக்கு விலைகள் அதிகரித்துள்ளன.
இந்த ஒன்றரை மாதகாலத்தில் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்களா? தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலவச உரம் வழங்கப்படுவதாக கூறியிருந்தாலும் கொள்கை விளக்கத்தில் அது உரமானியம் என மாற்றப்பட்டுள்ளது.
இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு அதனை விதைத்தால் எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டை பாதுகாக்க முடியாது. இறையான்மையையும் பலப்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரங்களின் போது தற்போதைய அரச தலைவரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், அவரது கட்சியினரும் அமெரிக்காவுடனான மில்லேனியம் சவால் ஒப்பந்தம் நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்து நாட்டு மக்களை குறிப்பாக பெரும்பான்மையினமான சிங்கள பௌத்த மக்களை அச்சுறுத்தி வந்ததையும் நாடாளுமன்றில் எதிர்கட்சித் தலைவர் சஜித் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக எம்.சீ.சீ ஒபந்தம் செய்து கொள்ளப்பட்டால் ஸ்ரீலங்காவை அமெரிக்கா அதன் காலனித்துவ நாடாக மாற்றிக் கொள்ளும் என்றும் அதனால் நாட்டின் தேசிய பாதுகாப்பும் ஆட்புல ஒருமைப்பாடும், சுதந்திரமும் பறிபோகும் என்றும் எச்சரித்த ராஜபக்ஷ சகோதரர்களும், அவரது விசுவாசிகளும், தாங்கள் ஆட்சிபீடம் ஏறினால் அந்த ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடமாட்டோம் என்ற உறுதிமொழியையும் வழங்கியிருந்தனர்.
எனினும் ஆட்சிக்கு வந்ததை அடுத்து குறித்த ஒப்பந்தத்தில் உள்ள அனுகூலம் மற்றும் பிரதிகூலங்களை ஆராய்ந்து பரிந்துரைப்பதற்காக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ விசேட நிபுணத்துவ குழுவொன்றை நியமித்திருக்கின்றார்.
அமெரிக்காவுடனான எம்.சி.சி என்கிற ஒப்பந்தமானது ஸ்ரீலங்காவிற்கு 70 சதவீதம் சிறந்தது என்றும் 30 வீதமே அதில் பாதகமான விடையங்கள் இருப்பதாக தேர்தல் மேடைகளில் அதனை கடுமையாக எதிர்த்தவர்களில் ஒருவரான ராஜபக்சவாதி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில போன்றவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவுடனான ஒப்பந்தங்கள் தொடர்பில் ஆட்சிபீடம் ஏறுவதற்கு முன்னர் ஒன்றையும், ஆட்சிபீடம் ஏறிய பின்னர் இன்னுமொன்றையும் கூறுவதை விடுத்து ராஜபக்ஷ அரசாங்கம் தைரியம் இருந்தால் முதலில் அமெரிக்காவுடனான ஒப்பந்தங்களை கிழித்தெறிய வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
அதுவும் இந்த நடவடிக்கையை எதிர்வரும் சுதந்திர தினத்தன்று செய்துகாட்டுமாறும் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிர்கட்சித் தலைவர் சவால் விடுத்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
தேசத்துரோக சர்வதேச ஒப்பந்தங்கள் குறித்து ஜனாதிபதி தேர்தல் காலத்தில் எதிர்தரப்பினர் உத்வேகமாக பேசினார்கள். எம்.சி.சி ஒப்பந்தம், எக்ஸா-சோபா மற்றும் சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தம் எனப் பலவற்றையும் கூறினார்கள். ஆனால் அன்று தேர்தல் மேடைகளில் எம்.சி.சி ஒப்பந்தத்தை செய்து கொண்டால் நாட்டிற்கு பேராபத்து என்றார்கள்.
தலதா மாளிகைக்கு செல்லும் வழியில் ஒருபக்கம் இலங்கையர்களுக்கும் இன்னொரு பக்கம் அமெரிக்காவுக்கும் உரித்தாகும் என்றும் அச்சறுத்தினார்கள். அப்படியென்றால் நான் ஒரு யோசனை முன்வைக்கின்றேன். நாட்டிற்கு சூனியமாகும், ஆபத்தாகும் என்று கூறுகின்ற எம்.சி.சி ஒப்பந்தத்தை கிழித்தெறியுமாறு கோருகிறேன்.
அதற்கான யோசனையை சபைக்கு கொண்டு வந்தால் முழு ஆதரவையும் வழங்குவோம். ஏன் சிரமமின்றி எதிர்வரும் பெப்ரவரி 04 ஆம் திகதியான சுதந்திர தினத்தில் அந்த ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தால் நலமாக இருக்குமே எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சவாலுக்கு பதிலளித்து உரையாற்றிய ராஜபக்ஷ அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, அமெரிக்காவுடனான எம்.சி.சி ஒப்பந்தத்தை புதிய அரசாங்கம் ஒருபோதும் செய்துகொள்ளாது என்று உறுதியளித்தார்.
இதன் போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
எம்.சி.சி ஒப்பந்தம் குறித்து யோசனையை அமைச்சரவைக்கு கொண்டு வந்த போது சஜித் பிரேமதாச எங்கே இருந்தார்? அப்போது அமைச்சரவைக்குத் தலைமை தாங்கிய அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாச ஒருவார்த்தை கூட அதற்கெதிராகப் பேசவில்லை என்று கூறியுள்ளார்.
படையினரை சிறையில் தள்ளிய போது சஜித் பிரேமதாச தனது புனித வாயினால் ஒருவார்த்தை கூட பேசவில்லை. இந்த நாடாளுமன்றத்தில் கூட அதுபற்றி வாய் திறக்கவே இல்லை.
எம்.சி.சி ஒப்பந்தத்தை கிழித்தெறியுமாறு கூறுகின்றீர்களே எங்கே இருக்கிறது அந்த ஒப்பந்தம்? கையெழுத்திட்டிருந்தால் அந்த ஒப்பந்தத்தைக் கிழிக்க முடியும்.
ஆனால் அப்படியொன்றும் இன்னும் இடம்பெறவில்லை. ஆகவே எம்.சி.சி ஒப்பந்தத்தில் நாங்கள் கைச்சாத்திட மாட்டோம் என்பதை மிகவும் பொறுப்புடன் கூறுகின்றோம்.
சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து நாங்கள் மீளாய்வு செய்வோம். எமது ஆட்சிக்காலத்தில் இராணுவத்தினரைப் பழிவாங்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.