புதுச்சேரியில் வளைகாப்பு முடிந்த அடுத்தநாள் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் அக்ரா மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ (23).
இவர் புதுச்சேரியில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு சென்று வந்தபோது அப்பகுதியைச் சேர்ந்த அருண்ராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும் காதலித்து வந்தனர். பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் ஐந்து மாதங்களுக்கு முன்னர் திருமணமும் நடந்து முடிந்தது.
நாட்கள் சென்ற பிறகு ஜெயஸ்ரீ கர்ப்பமானார். 5 வது மாதத்தில் வளைகாப்பு நிகழ்ச்சியும் அவருக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது அருண்ராஜ் வீட்டினர் ஜெயஸ்ரீக்கு தங்க வளையல்கள் போட சொல்லி பெண் வீட்டில் கேட்டுக்கொண்டனர்.
ஆனால் நிகழ்ச்சி அன்று வளையல்கள் போடாமல் இருந்ததால் அருண்ராஜ் குடும்பத்துக்கும் ஜெயஸ்ரீ குடும்பத்துக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஜெயஸ்ரீயின் சகோதரர் அருண்ராஜை தாக்கியுள்ளார். பின்னர் இரு வீட்டினரும் சமாதானம் ஆன நிலையில், ஜெயஸ்ரீயை அழைத்துக்கொண்டு அருண்ராஜ் குடும்பம் புதுவைக்கு சென்றுள்ளது.
பின்னர் சில நாட்கள் கழித்து ஜெயஸ்ரீ தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஜெயஸ்ரீயின் வீட்டுக்கு தகவல் வந்தது . இதை கேட்டு அதிர்ச்சியான அவர்கள் உடனே அருண்ராஜ் வீட்டுக்கு விரைந்தனர். அங்கு வீட்டு அறையில் ஜெயஸ்ரீ சடலமாக தொங்குவதை கண்டு கண்ணீர் விட்டு கதறினர்.
இதையடுத்து பொலிசார் அவர் சடலத்தை கைப்பற்றினார்கள்.
ஜெயஸ்ரீயின் சாவு குறித்து அவரது தாய் விஜயா பொலிசில் புகார் அளித்தார். அதில், தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். அதன்பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயஸ்ரீக்கு திருமணமாகி 5 மாதமே ஆவதால் அவரது மரணம் குறித்து தாசில்தார் விசாரணையும் நடைபெற்று வருகிறது.