வவுனியா போக்குவரத்து பொலிஸார் இன்று (09) மாலை மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 39 சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் 03 சாரதிகளுக்கு எதிராக வழக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க தலைமையில் வவுனியா புகையிரத நிலைய வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது சுமார் இரு மணிநேரத்தில் மூன்று சாரதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளதுடன் முப்பத்தி ஒன்பது சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த சோதனை நடவடிக்கையில் தலைக்கவசம் சீராக அணியாமை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை , அதிக சத்தமுடைய ஹோர்ன், முச்சக்கரவண்டிக்கு அதிகளவான அலங்காரம், தலைக்கவசத்தினுள் தொலைபேசி வைத்திருந்தமை போன்ற பல்வேறு குற்றங்களுக்காகவே சாரதிகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் உப பொலிஸ் பரிசோதகராக பணியாற்றிய காமினி திஸாநாயக்க போக்குவரத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பதவியுயர்வு பெற்று நேற்றையதினம் கடமையினை பொறுப்பேற்று 24 மணிநேரத்தினுள் இவ் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.