ஈரான் – அமெரிக்க போர் பதற்ற நிலவும் நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக பரவலாக பேசாப்படுகின்றது.
எனினும் அதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவே காணப்படுவதாக அரசாங்க ஊடகப் பேச்சாளர் இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் அதற்கான மாற்று வழிகள் குறித்து அரசாங்கம் தீர்மானிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு முன்னரும் இவ்வாறான எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு இலங்கை முகங்கொடுத்திருக்கிற நிலையில் இவ்விடயம் பாரிய சவாலாக அமையாது என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஈரானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான இராஜதந்திர நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளதாகவும் அரசாங்க ஊடகப் பேச்சாளர் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
ஈரான் – அமெரிக்க போர் பதற்ற நிலைமை காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அச்சம் கொண்ட யாழ். மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு படையெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.