இலங்கையின் நீதித்துறையை ஊழல்மிக்கதாக சர்வதேசத்திற்கு காட்டும் சதி முயற்சியின் பின்னணியில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் செயற்படுவதாக சிங்கள அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இதனடிப்படையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் செயற்பாடு காணப்படுவதாக, தாய் நாட்டிற்கான இராணுவம் எனும் அமைப்பு தெரிவித்துள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவினால் மேற்கொள்ளப்பட்ட சில தொலைபேசி உரையாடல்கள் இலங்கையின் நீதித்துறை ஊழல் நிறைந்தவை, சுதந்திரமானவை அல்ல என்பதற்கான ஆதாரங்களை சேகரிக்கும் முயற்சியாக உள்ளதென அமைப்பின் ஏற்பாட்டாளர் ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய தங்களை பொறுத்தவரை, இந்த தொலைபேசி உரையாடல்கள் மேற்பரப்பில் தோன்றுவதை விட ஆழமான சதித்திட்டமாக இருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சட்டத்தரணியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனே செயற்படுகின்றார்.
முடிந்தளவு நீதித்துறையை ஊழல் மிக்கது என்பதற்கான சாட்சியங்களை சேகரிப்பதென்பது சுமந்திரன் வழங்கிய ஆலோசனையாகும்.
இலங்கையின் நீதித்துறை ஊழல் மிக்கது, சுதந்திரமானது அல்ல என்று கூறும் சதித்திட்டத்தின் இறுதி நோக்கம் நாட்டை பிளவுபடுத்துவதாக இருக்கலாம்.
எனவே இந்த தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.