பல்கலைக்கழக மாணவர்களினால் நேற்று நடத்தப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிறுத்தியுள்ளார்
மஹாபொல அதிகரிப்பு மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை கோரிகளை முன்வைத்து பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று பாரிய போராட்டத்தை முன்னெடுத்தனர்.
பல்கலைக்கழகத்திலிருந்து பேரணியாக சென்ற மாணவர்கள், ஜனாதிபதி செயலகத்திற்கு முன் போராட்டம் நடத்த முயற்சித்துள்ளனர்.
இது தொடர்பில் தகவல் கிடைத்தவுடன், எந்தவொரு தடங்கலும் இல்லாமல் மாணவர்களை ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைய அனுமதிக்குமாறு அனைத்து பாதுகாப்பு தரப்பினருக்கும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபயவும் ஜனாதிபதியின் செயலாளரும் இல்லாத நிலையில் மாணவர்கள் உட்புகுந்துள்ளனர்.
மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பு ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் மற்றும் உயர் கல்வி அமைச்சின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில் மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஜனாதிபதி செயலாளருக்கு விளக்கமளித்து ஆலோசனை கோரியுள்ளனர். அதற்கமைய மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இதனையடுத்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்திலிருந்து கலைந்து சென்றதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.