தமிழகத்தில் குழந்தைகளின் பசியை போக்க தனது தலைமுடியை விற்ற பெண்ணுக்கு தமிழக அரசு உதவிக்கரம் நீட்டியுள்ளது.
சேலம் மாவட்டம் மன்னார்பாளையம் பகுதியை சேர்ந்த செல்வம்-பிரேமா தம்பதியினர்.
செல்வம், செங்கல்சூளை ஆரம்பிப்பதற்காக நான்கு லட்ச ரூபாய் கடன்பெற்று, நண்பரிடம் அளித்துள்ளார்.
ஆனால், நண்பர் தலைமறைவானதால் குடும்பத்தை நடத்த முடியாமல் செல்வம் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் பிரேமா தனது 3 குழந்தைகளை வளர்க்க முடியாமல் தவித்து வந்துள்ளார். கூலித்தொழிலில் கிடைத்த சொற்ப வருமானம் கணவன் வாங்கிய கடனை திரும்ப செலுத்தவே போதுமானதாக இல்லை. உடல்நிலை காரணமாக கூலிவேலைக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் ஒருவேளை உணவுக்கு கூட காசு இல்லாமல் பிரேமாவை வறுமை வாட்டி வந்தது.
இந்த நிலையில் தலையை மொட்டை அடித்து கொண்டு, தலை முடியை 150 ரூபாய்க்கு விற்று குழந்தைகளின் பசியை போக்கியவர், தற்பொழுது தற்கொலை செய்ய முயன்றுருக்கிறார்.
இந்நிலையில் பிரேமாவின் ஏழ்மை நிலையை அறிந்த தமிழக அரசு, கைம்பெண்ணிற்கு வழங்கும் அரசு தொகையான 1000 ரூபாயை மாதந்தோறும் வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.
பிரேமாவின் வறுமை குறித்து கவலையடைந்த செங்கல்சூளை உரிமையாளர் பிரபு இது குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த சிலர் பிரேமாக்கு உதவ முன்வந்துள்ளனர். இதுவரை சுமார் 1 லட்சம் வரை பணம் உதவி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்பொழுது இந்த பணத்தை வைத்து, வாங்கிய கடன்களை அடைக்க முயற்சி செய்து வருகிறார்.
மேலும் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், ஏழ்மை நிலையில் தவித்து வந்த பெண் பிரேமாவிற்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் அரசு ஆணையை வழங்கியுள்ளார்.