எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக போட்டியிடுவோம் என முன்னாள் அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஹற்றன் போடைஸ் என்.சி தோட்டப் பகுதியில் இன்று மாலை ஒலி பெருக்கி சாதனங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலத்தில் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை சந்தித்திருந்தாலும் கூட, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரிய வெற்றியை பெற்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளுடன் பிரதமராக சஜித் பிரேமதாசவை நியமிப்போம்.
சஜித் பிரமேதாசவை ஆட்சிபீடம் ஏற்றக்கூடிய சந்தர்ப்பம் மீண்டும் எமது கைகளுக்கு கிடைத்துள்ளது. எனவே, நாம் இந்த சந்தர்ப்பத்தை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சிறுபான்மை மக்கள் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்றனர். எனவே, இந்த தேர்தலில் சஜித் பிரேமதாச பிரதமராக்க வேண்டும். அவர் பிரதமாரக வந்தால் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும்.
அத்தோடு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியையும் ரணில் விக்ரமசிங்க விட்டுக்கொடுப்பு செய்து சஜித் பிரேமதாசவிற்கு கொடுத்து இந்த ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால நலன் கருதி வழிநடத்துவதற்கான வாய்ப்பினை உருவாக்கி தருவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
கடந்த 25 வருட காலங்கள் ரணில் விக்கிரமசிங்க இந்த கட்சியை வழிநடத்தி வந்தாலும், இந்த கட்சியினுடைய முன்னேற்றகரமான செயல்களை செய்வதற்கு தவறி இருந்தார் என்பது தான் உண்மையான கருத்து.
ஏனென்றால் ஒவ்வொரு தேர்தல்களிலும் பின்னடைவை சந்திக்க கூடிய நிலையிலேயே இருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.
எனவே மலையக மக்கள் கடந்த காலங்களில் எமக்கு வாக்களித்து எம்மை தெரிவு செய்து மக்கள் சேவைக்கு வழிவகுத்து கொடுத்தது போல் இம்முறை தேர்தலிலும் எமக்கு வாக்களித்து மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்புக்களை பெற்று தரும்படி குறிப்பிட்டுள்ளார்.