அம்பாறை – கல்முனை வடக்கு பிராந்திய சுகாதார வைத்திய பணிமனையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பான கல்முனை, நற்பிட்டிமுனை எல்லையில் அமைந்துள்ள பகுதியில் உள்ள வீடுகளில் குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்முனை வடக்கு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளின் பணிப்பின் பேரில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், கல்முனை சுற்று சூழல் பாதுகாப்பு பொலிஸார், கடற்படையினர் ஆகியோர் இணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த நடவடிக்கைகள் இரு தினங்களாக மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்,டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் குறித்தும் பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.
கல்முனை சுகாதார வைத்திய பிரிவில் உள்ள நற்பிட்டிமுனை கிராமத்தில் அண்மைக்காலமாக டெங்கு நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கல்முனை பிராந்தியத்தில் இதுவரைக்கும் 726 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நாடு பூராகவும் டெங்கு நோயினால் 72,764 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரைக்கும் 78 மரணங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.