விஜயதாச ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகியோர் எதிர்காலத்தில் நாடாளுமன்ற கதிரையில் அமர்வதற்காக இனவாதக் கருத்துக்களை விதைக்கின்றார்கள் என முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியின் செயற்பாடுகள் சில இன்று வரவேற்கத்தக்கதாக உள்ளது. அவர் பிரதான வைத்தியசாலைக்கு சென்று மக்களுடைய குறைகளை கேட்டறிகின்றார்.
நகரப்பகுதிகளில் உள்ள அசுத்தங்களை சுத்தமாக்க வேண்டும் என்றும் கூறுகின்றார். அவ்வாறான விடயங்கள் வரவேற்கத்தக்கது.
ஐந்து வீத வெட்டுப் புள்ளி மேலும் குறைக்கப்படும் என்று சிந்திக்கின்ற போது, விஜயதாச ராஜபக்ச என்கின்ற தற்போதைய ஐக்கிய தேசிய கட்சியினுடைய தேசியப்பட்டியலில் வந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பொதுஜன முன்னணியுடன் சேர்ந்து கொண்டு சிறுபான்மைக்கும், சிறு கட்சிகளுக்கும் பழைய முறைமையிலே 12 வீத வெட்டுப் புள்ளிக்கு போக வேண்டும் என்று கூறுகின்றார்.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது கட்சியாக இருந்த ஜே.வி.பியினர் நாலரை லட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தாலும் கூட எந்தவொரு மாவட்டத்திலும் அவர்கள் ஐந்து வீத வாக்குகளைப் பெறவில்லை அப்படியானால் எதிர்காலத்தில் 12 வீத வெட்டுப்புள்ளியாக வருமாக இருந்தால் ஜே.வி.பிக்கு ஒரு ஆசனம் கூட பெற முடியாத சூழல் உருவாகின்றது.
அத்துடன் விஜயதாசவினுடைய எடுகோள் அவர் ஒரு இனவாதியாகவே கடந்த காலங்களில் தன்னை பயன்படுத்தி இருக்கின்றார்.
அவர் நீதி அமைச்சராக இருந்தபோது பாரியதொரு இனக்கலவரத்தை உருவாக்குவதற்காக பொதுபலசேனா, ராவணா பலய, சிங்களத் தேசிய இயக்கம் போன்றவை முனைப்பு காட்டிய போது அன்று பல பள்ளிகளும், பல நிறுவனங்களும் அழிக்கப்பட்ட போது நாங்கள் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறுபான்மை கட்சிகள் விஜயதாஸ ராஜபக்ஷவை பேசுவதற்கு நேரம் ஒதுக்கி கேட்ட போது எங்களுக்கு தராமல் அவர் பொதுபலசேன முன்னணியின் தலைவர் ஞானசார தேரருக்கு நாடாளுமன்றத்தில் இடம் கொடுத்தார்.
இப்படிப்பட்ட இனவாதி தான் தற்போது 21, 22 தேர்தல் சட்டம் மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கின்றார். இது தனிப்பட்ட கட்சியினுடைய சுய நலன்களுக்காக உருவாக்கப்படுகின்ற கோரிக்கைகள் ஆகும்.
சரத் பொன்சேகா கடந்த 7ம் திகதி ஆற்றிய உரையில் குற்றப் புலனாய்வுக்கு பொறுப்பாக ஒரு முஸ்லிமை நியமிக்க முடியுமா என கேட்கின்றார்.
இந்தக் கேள்வி அர்த்தமற்றது. ஏனென்றால் அன்று வடபுலத்தில் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட போது வஸ்தியான் பிள்ளை வடபுல புலனாய்வுக்கு பொறுப்பாக இருந்தார் என்று சொல்லப்பட்ட வரலாறு தெரியும்.
அதேபோன்று கடற்படைத் தளபதியாக சின்னையா பொறுப்பா இருந்தார். அதேபோன்று மேஜர் சஹிட் மேஜர் வஹார் போன்றவர்கள் முஸ்லிம்கள் இருந்திருக்கிறார்கள். டி.ஐ.ஜி லாபீர், டி.ஐ.ஜி லத்தீப் போன்றவர்கள் பொலிஸ் துறையில் இருந்திருக்கின்றார்கள்.
இவர்களெல்லாம் இரண்டு கட்சிகளிலும் பொறுப்பாக இருந்தவர்களால் நியமிக்கப்பட்டவர்கள். சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களுடைய சேவைகளைப் புரிந்துகொண்டு அவர்களை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்கள்.
இந்த நிலையிலேயே சரத் பொன்சேகா மற்றும் விஜயதாச போன்றவர்கள் எதிர்காலத்தில் நாடாளுமன்ற கதிரையில் அமருவதற்காக இனவாத கருத்துக்களை விதைக்கின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார்