2 ஈராக் அதிகாரிகளும் 2 விமானப்படை வீரர்களும் காயம் அடைந்துள்ளனர் என ஈராக் ராணுவம் தெரிவிக்கிறது. ஈராக்கில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில் நேற்றுசரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடைபெற்றுள்ளது.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் வடக்குப் பகுதியில் நடந்த இந்தத் தாக்குதல் குறித்து ஈராக் ராணுவம் வெளியிட்ட தகவலில், எட்டு கட்யூஷா ரக ஏவுகணைகள் அல்-பலாத் விமானப்படைத் தளத்தைத் தாக்கின எனக் கூறப்பட்டுள்ளது.
இதில், இரண்டு ஈராக் அதிகாரிகளும் இரண்டு விமானப்படை வீரர்களும் காயம் அடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்-பலாத், ஈராக்கின் F-16 ரக விமானங்களைக் கொண்ட முக்கியமான விமானப்படைத் தளமாகும். விமானப்படையின் பலத்தை அதிகரிக்க அமெரிக்காவிடமிருந்து இந்த விமானங்களை ஈராக் வாங்கியது.
இதே தளத்தில் அமெரிக்கா விமானப்படைக்கான சிறு பகுதியும் உள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையே பதற்றநிலை உருவானதும் இந்தத் தளத்திலிருந்த விமானங்களும் வீரர்களும் பெரும்பாலும் வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டனர்.
ஒரேயொரு விமானமும் சுமார் 15 வீரர்களும் மட்டுமே அங்கேயே உள்ளனர் எனத் தகவல் கிடைக்கிறது. அமெரிக்கப் படைக்கு இடம் அளித்திருப்பதால்தான் இத்தாக்குதல் நடைபெற்றிருக்கிறது என ஈராக் தரப்பில் கருதப்படுகிறது.
அண்மையில், ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானை அமெரிக்கா ஈராக் தலைநகர் பாக்தாத்தில் வான்வழித் தாக்குதலில் கொன்றது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவும் ஈரானும் மாற்றி மாற்றி ஈராக்கில் ஏவுகணை தாக்குதல்கள் நடத்திவருகின்றன.