எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் யாழ்ப்பாணத்தில் போட்டியிடவுள்ளதாகவும் வேறு எந்தக்கட்சிக்கும் செல்லும் நோக்கம் எதுவும் தனக்கு இல்லையெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும் கூட்டமைப்பில் வாய்ப்பு வழங்க சுமந்திரன் பெருந்தொகை பணம் கோரியதாகவும் சமுக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்தமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
ஐக்கிய தேசிய கட்சியைத் தவிர்த்து வேறு எந்தக்கட்சிக்கும் செல்வதற்கு நான் பேச்சுக்களை நடத்தவில்லை.எனது மக்களுக்கான சேவை ஐக்கிய தேசிய கட்சி ஊடாகவே மேற்கொள்ளப்படும். நாடாளுமன்ற தேர்தலிலும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் யாழ்.மாவட்டத்திலேயே களமிறங்குவேன்.
நான் கட்சி மாறுவதாக வெளிவரும் செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என அவர் மேலும் தெரிவித்தார்.