கும்பகோணத்தில் டெல்லியை சேர்ந்த பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், ஒரு குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தின் குடந்தையில் கடந்த 2018ஆம் ஆண்டு டெல்லியை சேர்ந்த இளம்பெண் வந்து இறங்கினார்.
இரவு நேரத்தில் அங்குள்ள விடுதிக்கு செல்ல ஆட்டோவில் ஏறிய நிலையில் ஆட்டோ ஓட்டுனர் குருமூர்த்தி வேண்டுமென்றே அருகில் இருக்கும் விடுதிக்கு செல்லாமல் பல இடங்களில் சுற்றி கொண்டிருந்தார்.
இது குறித்து அப்பெண் கேட்ட நிலையில் வழியிலேயே அவரை இறக்கிவிட்டுள்ளார்.
பின்னர் அங்கிருந்த வேறு இருவரிடம் விடுதிக்கு அவர் வழி கேட்ட போது போதையில் இருந்த இருவரும் அவரை தூக்கி சென்று பலாத்காரம் செய்தனர்.
அப்போது அவர்களின் இரண்டு நண்பர்களும் சேர்ந்து அப்பெண்ணை சீரழித்ததோடு குருமூர்த்தியும் அதில் இணைந்து கொண்டார்.
தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கில் குருமூர்த்தி, புருஷோத்தமன், அன்பரசன், தினேஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தஞ்சை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஐவர் மீதான குற்றங்களும் நிரூபிக்கப்பட்ட நிலையில் புருஷோத்தமன், அன்பரசன், தினேஷ், வசந்தகுமார் ஆகிய நால்வருக்கும் ஆயுள் தண்டனையும், குருமூர்த்திக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இறக்கும் வரையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும் சிறையில் தான் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.