புத்தளம் – எலுவாங்குளம், இறால்மடு பகுதியில், குளிக்கச் சென்ற மூவர், குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் இரண்டு பிள்ளைகளே இன்று மாலை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
36 வயதான வி.சந்திரகுமாரி, அவரது 17 வயது மகன் ஆர்.கிருஷ்ணகுமார், 19 வயதான மகள் ஆர்.சுபாஷினி ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கண்டி – கட்டுகஸ்தோட்டை பகுதியிலிருந்து தோட்டமொன்றை பராமரிப்பதற்காக சென்றிருந்த குடும்பத்தினரே இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சடலங்கள் புத்தளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.