நீதித்துறையில் எவரும் தலையிட அனுமதிக்கப்படமாட்டாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்தவகையில் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அர்ஜூன் மகேந்திரனை நாடு கடத்தவேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்தும் புதிய அரசாங்கம் சிங்கப்பூரிடம் வலியுறுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் அன்பான வெறுப்பை தாம் கொண்டிருப்பதாக கூறியுள்ள அவர், எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஹம்பாந்தோட்டையில் தாம் அவரை எதிர்த்து போட்டியிடவுள்ளதாகவும், அதில் அவரை வெற்றிக்கொள்ளப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக உள்ளபோது மஹிந்த, சமல் என்ற ராஜபக்சர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர். இந்தநிலையில் இது ராஜபக்சர்களின் நிர்வாகம் என்று கூறப்படுவது தொடர்பில் கருத்துரைத்த அவர்,
ராஜபக்சர்கள் நியமிக்கப்படவில்லை. அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்று தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்தல் ஒன்று நடைபெறாதபோது கோட்டாபயவை தவிர ஏனைய ராஜபக்சர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுவதை ஏற்கமுடியாது என்று கேள்விக்கு பதிலளித்துள்ள அவர்,
கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து சென்ற வகையில் மஹிந்தவை பிரதமராக்க பொதுஜன பெரமுனவின் கட்சித்தலைவர்கள் இணக்கம் வெளியிட்டனர்.
இந்தநிலையில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்றதும் பிரதமரான ரணில் விக்ரமசிங்கவை பதவி விலக யாரும் கோரவில்லை. எனினும் அவர் மக்களின் தீர்ப்பை மதித்து பதவி விலகினார் என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.