காணாமல்போனோர் தொடர்பான அலுவலக விடயத்தில் மீளமைப்புக்கள் செய்யப்படவேண்டுமானால் அது விரிவான கலந்துரையாடல்களின் பின்னரே செய்யப்படவேண்டும் என்று காணாமல்போனோர் தொடர்பான அலுவலக தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த மீளமைப்பு தொடர்பில் காணாமல்போனோரின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் தமது அலுவலகத்துடன் இணைந்து செயற்படும் அமைப்புக்களுடன் கலந்துரையாடப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் தமது உறவுகளை இரண்டு தசாப்தங்களாக காணவில்லை என்று தேடிக்கொண்டிருக்கும் உறவுகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அமைக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பிலும், அலுவலகத்தின் பணிகள் தொடர்பில் கடந்த 9ம் திகதியன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் மனித உரிமைகள் துறை அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா ஆகியோருக்கு கடிதங்கள் மூலம் அறிவித்துள்ளதாகவும் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி நீண்ட கால பிரச்சினையான காணாமல்போனோர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலேயே இந்த அலுவலகம் அமைக்கப்பட்டதாக அந்தக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதில் வடக்கு கிழக்கு போர் மற்றும் தெற்கின் கலவரங்களில் காணாமல்போனோரின் நிலை தொடர்பிலேயே ஆராயப்படவுள்ளன.
இந்தநிலையில் குறித்த பிரச்சினைக்கு நீண்டகாலமாக ஜனாதிபதி ஆணைக்குழுக்களை நியமித்தும் அவற்றால் தீர்வுக் காணமுடியவில்லை.
அத்துடன் அரசாங்கத்தினால் 2011ம் ஆண்டு அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையின் படியே காணாமல்போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டதாகவும் சாலிய பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அலுவலகத்தின் பணிகள் மட்டுப்படுத்தப்பட்ட காலத்துக்கு உட்படாதவை.
அத்துடன் இது காணாமல்போனவர்களின் உறவுகளுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்டதென்பதை அனைவரும் கருத்திற்கொள்ள வேண்டும் என்றும் சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.