கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும மாத்தளை வில்கமுவ பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது பாடசாலை நிர்வாகம் மற்றும் மாணவர்களிடம் சபையில் பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருந்தார்.
தாம் கல்வி அமைச்சராக பாடசாலைகளுக்கு அனுப்பி வைத்துள்ள சுற்றுநிருபத்தை தாமே மீறியுள்ளதாக தெரிவித்தே இவ்வாறு கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும மன்னிப்பு கோரியுள்ளார்.
நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் முதலாம் தர மாணவர்களின் வித்தியா ஆரம்ப நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றன.
இதன்போது கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும மாத்தளை வில்கமுவ நுககொல்ல தர்ம பிரதிப ஆரம்ப பாடசாலையின் வித்தியா ஆரம்ப நிகழ்வில் விசேட அதிதியாக கலந்துகொண்டிருந்தனர்.
பாடசாலைகளில் அரசியல்வாதிகள் கலந்துக் கொள்ளும் நிகழ்வுகள் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அண்மையில் சுற்றுநிருபம் ஒன்றை அனைத்து பாடசாலைகளுக்கும் அனுப்பி வைத்திருந்தார்.
அதனை சரிவர அமுல் செய்யுமாறும் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை பாதிக்கும் எவ்வித விழாக்களையும் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மட்டுப்படுத்துமாறும் அவர் வெளியிட்ட சுற்றுநிருபத்தில் குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும் நேற்றைய தினம் தாம் கலந்துகொண்ட வித்தியா ஆரம்ப நிகழ்வுகள் சுமார் இரண்டு மணித்தியாலங்களை தாண்டி நடைபெற்றமையினால் கல்வி அமைச்சராக தாம் வெளியிட்ட சுற்றுநிருபத்தை தாமே மீறியுள்ளதாகவும் அதனால் தாம் இந்த சபையில் அதுகுறித்து மன்னிப்புக்கோரி நிற்பதாகவும் தெரிவித்தார்.
அதேபோல நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளருக்கு குறித்த தவறானது இரண்டாவது முறையும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறும் இதன்போது கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிவுரை வழங்கியிருந்தார்.
பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய எவ்வித நிகழ்ச்சிகளும் பாடசாலைகளின் ஏற்பாடு செய்யக் கூடாது எனவும் விளையாட்டுப் போட்டி மற்றும் தேசிய நிகழ்வுகள் சுமார் ஒன்றரை மணித்தியாலங்களுக்கும் ஏனைய நிகழ்வுகள் ஒரு மணித்தியாலத்திற்கும் மட்டுப்படுத்தப்பட்ட வேண்டும்.
பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கும் நோக்கிலேயே நாட்டின் இடைக்கால அரசாங்கம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.