அமெரிக்காவுடனான எம்.சி.சி ஒப்பந்தம் குறித்து எந்தவொரு வெளிக்கள அழுத்தமும் அரசாங்கத்திற்கு பிரயோகிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
வல்லரசு நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள் ஒரே தினத்தில் இலங்கைக்கு படையெடுத்தமை குறித்து வெளியான சர்ச்சைக்கு பதிலளித்த அவர் இதனை கூறியுள்ளார்
கொழும்பிலுள்ள பாடசாலை ஒன்றில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன இவ்வாறு கூறியுள்ளார்.
“இலங்கை மக்கள் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக தேர்வுசெய்ததன் பின் ஏற்பட்டுள்ள நம்பிக்கையானது எமது எதிர்பார்ப்பாக உள்ளது.
அவருடன் பேச்சு நடத்த ரஷ்ய, சீன நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள், அமெரிக்க இராஜாங்க செயலாளர், பிரித்தானியாவின் விசேட பிரதிநிதி ஆகியோர் எமது நாட்டிற்கு ஒரே தினத்தில் விஜயம் செய்திருந்தனர்.
இதன் கௌரவமானது இலங்கைக்கு உரித்தாகும். இவ்வாறு ஒரே தினத்தில் யாரும் இதற்கு முன் வந்ததில்லை. ஜனாதிபதியின் திட்டம், அதற்கான ஒத்துழைப்பு என்பன குறித்து கலந்துரையாடப்பட்டன.
நாட்டின் பாதுகாப்பு, அபிவிருத்தி குறித்து பேசப்பட்டது. பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து பேசப்பட்டன.
அனைத்துவித ஒப்பந்தங்களும் நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றால் அவற்றை மீளாய்வு செய்வதே புதிய அரசாங்கத்தின் கொள்கையாகும்.
அதனால் மீளாய்வு முடியும்வரை அதுகுறித்த முடிவை அறிவிக்கமுடியாது. இப்போதும் அமைச்சரவையின் துணைக்குழு நியமிக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் அந்நாட்டு அரசியலில் மிகவும் பலம்மிக்கவர். புதிய அரசாங்கம் மற்றும் புதிய ஜனாதிபதி முன்னெடுத்துவரும் திட்டம் குறித்தே அவர் வந்து பேசினார்” என கூறியுள்ளார்.