பிரித்தானிய விமான நிலையம் ஒன்றிற்கு வந்த தொலைபேசி அழைப்பு ஒன்று, விமானம் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பாக பயணி ஒருவர் சிறைக்கு செல்கிறார்.
Gatwick விமான நிலையத்திலிருந்து மொராக்கோ செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தொலைபேசி அழைப்பையடுத்து விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக இறக்கப்பட்டனர்.
பயணிகளின் உடைமைகள் அனைத்தும் இறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டன.
பயணிகளும் வெடிகுண்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.
அதற்குள் அந்த தொலைபேசி அழைப்பை ட்ரேஸ் செய்த பொலிசார், சரியாக விமான நிலையத்திற்குள் நுழைந்த Rashidul Islam (32) என்பவரை கைது செய்தனர். இந்த சம்பவம் நடந்தது மே மாதம் 4ஆம் திகதி.
இந்த வழக்கில் Rashidul Islamக்கு நேற்று 16 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
உண்மையில் மொராக்கோவிலிருக்கும் தனது காதலியைக் காண்பதற்காக புறப்பட்டுள்ளார் Rashidul Islam.
ஆனால், அவர் செல்லவேண்டிய ரயில் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. உடனே, அவர் டாக்சி ஒன்றைப் பிடித்து விமான நிலையம் புறப்பட, போக்குவரத்து நெரிசலால் தாமதம் ஆகியுள்ளது.
எனவே, விமான நிலையத்திற்கு தொலைபேசியில் அழைத்த Rashidul Islam, உங்கள் விமானத்திலிருக்கும் ஒருவரிடம் வெடிகுண்டு இருக்கலாம், நீங்கள் விமான புறப்பாட்டை தாமதம் செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து ஏற்பட்ட பரபரப்பால் பயணிகள் பாதிக்கப்பட்டதோடு, அதிக நேரம் விமான நிலையத்திலேயே விமானம் நின்றதால், மொத்தத்தில் விமான நிறுவனத்துக்கு 30,000 பவுண்டுகள் இழப்பும் ஏற்பட்டது.
எனவே, Rashidul Islam கைது செய்யப்பட்டு 16 மாதங்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், எங்கே தனது காதலியை சந்திக்க முடியாமல் போய்விடுமோ என்று பயந்துதான் தான் அதைச் செய்ததாகவும், பயணிகளை பீதியடையச்செய்யும் நோக்கம் தனக்கில்லை என்றும் கூறியுள்ளார் Rashidul Islam.