தற்போதைய சூழலில், ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட லிபியா அரசு கவிழும் என்றால், அது ஐரோப்பிய நாடுகளை முற்றாக பாதிக்கும் என துருக்கி ஜனாதிபதி தையுப் ஏர்துகான் எச்சரித்துள்ளார்.
லிபியா தொடர்பில் பெர்லினில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்னர் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி தையுப் ஏர்துகான்,
தேசிய உடன்படிக்கை அரசாங்கத்தை (ஜி.என்.ஏ) போதுமான அளவில் ஆதரிக்க ஐரோப்பிய ஒன்றியம் தோல்வி அடைந்துள்ளது “ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் உள்ளிட்ட அதன் முக்கிய மதிப்புகளுக்கு எதிரான வஞ்சனையாகும் என்றார்.
ஃபயஸ் அல்-சர்ராஜ் தலைமையிலான தேசிய உடன்படிக்கை அரசாங்கமானது கடந்த ஏப்ரல் முதல் நாட்டின் கிழக்கை தளமாகக் கொண்ட பலம் மிகுந்த கலீஃபா ஹப்தாரின் படைகளிடமிருந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.
இதுவரை 280 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் 2,000 போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதே நிலை நீடிக்கும் என்றால், தேசிய உடன்படிக்கை அரசாங்கம் கவிழும் நிலை ஏற்பட்டால், அது ஐரோப்பிய நாடுகளுக்கு தீவிரவாத அச்சுறுத்தலை உருவாக்கும் என்றார் ஏர்துகான்.
சிரியா மற்றும் ஈராக்கில் ராணுவ பலத்தால் ஒடுக்கப்பட்ட தீவிரவாத அமைப்புகளான ஐ.எஸ் மற்றும் அல்கொய்தா ஆகியவை இனி லிபியாவில் மீண்டெழும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒரு கூட்டு முயற்சியில், துருக்கியும் ரஷ்யாவும் இணைந்து போர்நிறுத்த ஒப்பந்தத்தை முன்னெடுத்துள்ளன,
ஆனால் இந்த வாரம் மாஸ்கோவில் நடந்த பேச்சுவார்த்தையின் இடையே ஹப்தார் வெளியேறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் ஆத்திரமடைந்த எர்துகான், ஹப்தார் மாஸ்கோவை விட்டு வெளியேறியதாக குற்றம் சாட்டியுள்ளது மட்டுமின்றி,
அவர் மீண்டும் சண்டையைத் தொடங்கினால் கண்டிப்பாக ஒரு பாடம் கற்பிப்பேன் என்றும் கூறினார்.