வவுனியா மன்னார் பிரதான வீதியில் இன்று அதிகாலை தொடக்கம் வீதி ஓரத்தில் தரித்து நிற்கும் 10க்கு மேற்பட்ட கனரக வானத்தினால் அவ்வீதியூடான போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
குறித்த கனரக வாகனங்களில் காற்றாலை அமைப்பதற்காக பீப்பாய்கள் காணப்படுகின்றன. அந்த பீப்பாய் வடிவ உருளைகள் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படும் காற்றாலை மின்உற்பத்தி திட்டத்திற்காக கொண்டு வரப்பட்டுள்ளன.
ஏ9 வீதியுடாக பயணிப்பதில் பாரிய சிக்கல்கள் காணப்படுவதினால் வவுனியா மன்னார் பிரதான வீதியுடாக மன்னாரை சென்றடைந்து மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியூடாக (பூநகரி வீதி) யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
பகல் நேரங்களில் வீதியில் பயணிப்பதினால் பாரிய போக்குவரத்து இடையூறு ஏற்படும் என்ற காரணத்தினால் இன்று அதிகாலை தொடக்கம் வவுனியா மன்னார் பிரதான வீதியில் பட்டானீச்சூர், வேப்பங்குளம், குருமன்காடு போன்ற பகுதியில் வீதி ஓரங்களில் தரித்து நிறுத்தப்பட்டுள்ளன.
எனினும் வவுனியா – மன்னார் பிரதான வீதி குன்றும் குழியுமான பாதை என்பதினாலும் வீதியின் கணிசமான பகுதியை ஆக்கிரமித்து இவ் வாகனங்கள் தரித்து நிற்பதினால் போக்குவத்து இடையூறு ஏற்பட்டுள்ளது.