கேரளாவில் மூன்று நாட்களாக மாயமாகியிருந்த பள்ளி ஆசிரியை, தலைமுடி அறுக்கப்பட்டு அழுகிய நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
கேரளாவின் காசராகோடு மாவட்டத்தை சேர்ந்த கூட்டுறவு வங்கி ஊழியர் சந்திரசேகரனின் மனைவி ரூபாஸ்ரீ (44). இவர் மியாபடவுவில் உள்ள எஸ்.வி. மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த ஜனவரி 16ம் திகதியன்று ஹொசங்காடியில் ஒரு சக ஊழியரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக நண்பகலில் பள்ளியில் இருந்து வெளியேறிய ரூபாஸ்ரீ, அங்கிருந்து மஞ்சேஸ்வரத்தில் உள்ள தனது மகளின் பள்ளிக்குச் சென்றதாக கூறப்படுகிறது.
மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவருடைய இரண்டு செல்போன்களுக்கு உறவினர்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.
அதில், ஒரு தொலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மற்றொன்று ஒலித்துக் கொண்டிருந்தது. ஆனால் யாரும் அதை எடுக்கவில்லை.
இதனையடுத்து அவருடைய உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். விசாரணையின் ஆரம்பத்தில், ஹோசங்காடியிலிருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ள துர்கிபால் சாலையோரத்தில் ரூபாஸ்ரீயின் ஸ்கூட்டர் கைவிடப்பட்டிருப்பதைக் பொலிஸார் கண்டறிந்தனர்.
இந்த நிலையில் சனிக்கிழமையன்று, சிதைந்த நிலையில் பெண் சடலம் ஒன்று கடற்கரை ஓரத்தில் கிடப்பதை பார்த்து மீனவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அவர் அணிந்திருந்த திருமண மோதிரத்தை வைத்து உடலை அடையாளம் கண்டுபிடித்தனர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக அவருடைய உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.