கட்சிக்குள் தலைமைத்துவம் தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கான தீர்வை எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் முன்வைக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு சபாநாயகர் கருஜயசூரியவுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடல் கொழும்பு–அமரசேகர மாவத்தையில் அமைந்துள்ள சபாநாயகரின் இல்லத்தில் இடம்பெற்றதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கலந்துரையாடலுக்கு முன்னர் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், சபாநாயகர் கருஜயசூரியவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சி தலைமைத்துவம் தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்ப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றிருந்தது.
எனினும் குறித்த சந்திப்பில் கட்சி உறுப்பினர்களிடத்தில் வேறுபாடான நிலைப்பாடுகள் காணப்பட்டதை அடுத்து அன்றைய தினம் தீர்மானம் எட்டப்படவில்லை.
இதேவேளை, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது