போர் முடிந்த பின்னர் படையினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டனர் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என முல்லைத்தீவில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவில் ஆயிரம் நாட்களைக் கடந்து தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்றையதினம் ஊடக சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டது.
குறித்த சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவி மரியசுரேஷ் ஈஷ்வரி தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த அறிக்கையில் காணாமல் ஆக்கப்பட்ட எந்த உறவுகளும் தன்னிடம் இல்லை என்பதையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த கருத்திற்கு மறுப்பு அறிக்கையினை நாங்கள் விடுகின்றோம். கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக போர்காலப் பகுதியில் இருந்த காலகட்டத்தில்தான் எமது உறவுகளை படையினரிடம் கையளித்ததும், காணாமல் ஆக்கப்பட்டதும். மே 18ஆம் திகதி போர் வெற்றிவிழா கொண்டாடித்தான் எங்கள் உறவுகளை அவர்கள் பெற்றார்கள்.
காணமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் விடுதலைப் புலிகளை சாட்டுவதை முழுமையாக கண்டிக்கின்றோம். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறித்தான் எங்கள் பிள்ளைகளை படையினரிடம் ஒப்படைத்தோம். அன்று இருந்தவர்கள் இன்று அரசாகவும் இருக்கின்றார்கள். அவர்களே இன்ற முற்றிலும் மாறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள் . காணாமல் ஆக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வரலாறும் உள்ளது.
வெள்ளைக் கொடியுடன் வாங்கள் உங்கள் பிள்ளைகளை ஒப்படையுங்கள் நாங்கள் விடுவிப்போம் என்று அன்று படை அதிகாரியாக இருந்தவர்கள் கூறினார்கள். அவர்கள்தான் இன்றும் படைத் தளபதிகளான இருக்கின்றார்கள். போர் காலத்திலும் இவர்கள்தான் இருந்தார்கள்.
ஜனாதிபதியின் மரண சான்றிதழுக்காகவா பத்து ஆண்டுகள் காத்திருந்தோம். படையினரிடம் கையளித்த உறவுகளுக்கான நீதி வேண்டும். தான் போர்க்குற்றத்திற்குள்ளாகாமல் தப்புவதற்காக எங்களை குற்றவாளிகளாக்கி நாங்கள் மரண சான்றிதழைப் பெற்றுக் கொள்ளப் போவதில்லை.
ஜனாதிபதி சொல்லும் குற்றத்தினை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளக் கூடாது. தாம் கைது செய்யவில்லை எனவும் மரண சான்றிதழ் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதியின் கருத்திற்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளாகிய நாங்கள் வன்மையான கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.
எங்களது உறவுகளுக்கு இந்த அரசுதான் பொறுப்புக் கூற வேண்டும். என்பதை உறுதிப்படுத்தி இந்த தேடலை தேடிக்கொண்டிருக்கின்றோம். அந்த உறவுகளை இல்லாமல் போக செய்யாமல் எங்களுக்கான நீதி வேண்டும்.
எங்களுக்கான நீதி இலங்கையில் கிடைக்காது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றவாளிகளை நிறுத்தி எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது? எப்போது விடுதலை என்பதை பெற்றுத் தர வேண்டும். அதுவரையில் நாங்கள் எங்களது போராட்டத்தைக் கை விட மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.