சீனாவில் கொரனோ வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் அங்குள்ள இலங்கையை மாணவர்களை பாதுகாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஹுஹான் பிராந்தியத்தில் கல்வி நடவடிக்கையில் ஈடுபடும் 44 இலங்கை மாணவர்களை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு அங்குள்ள இலங்கை தூதரகத்திற்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கொரனோ வைரஸ் தொற்று தீவிரமாக பரவுவதனால் சீனாவின் ஹுனான் நகரத்தை முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஹுனான் நகரத்தில் தங்கியிருக்கும் 44 இலங்கை மாணவர்களை பாதுகாப்பாக வைப்பதற்கு அவசியமான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஹுனான பிராந்திய அரசாங்கத்திடம், இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஹுஹான் பிராந்தியத்தில் உள்ள அனைத்து இலங்கையர்களினதும் தகவல்கள் தற்போது பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் சேகரித்து வருகின்ற நிலையில், அவர்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதேவேளை, சீனாவில் வாழும் அனைத்து இலங்கையர்களுக்கும் வெளிவிவகார அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்று விடுத்துள்ளது.
அதற்கமைய அங்கு வைரஸ் தொற்று அதிகரித்துள்ளமையினால் மக்கள் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முடிந்தளவு வீட்டிற்குள் இருக்குமாறும் நோய் நிலைமைகள் ஏற்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பெருமளவு சீனர்கள் உள்ள நிலையில், இதுவரை எந்தவொரு நபருக்கும் கொரனோ வைரஸ் தாக்கியதாக தகவல்கள் வெளியாகவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சீனா உள்ளிட்ட பல நாடுகளில் கொரனோ வைரஸ் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. இந்த வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.