வவுனியா வைரவப்புளியங்குளம் பத்தாம் ஒழுங்கையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியின் இயக்குனர் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபர் ப.கமலேஸ்வரிக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் பாடசாலை அதிபர் நேற்றிரவு வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.
சம்பவம் குறித்து தெரியவருகையில் ,
அண்மையில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவியொருவர் இரத்தப் பரிசோதனைக்காக இரத்தத்தினை தானியங்கி முறையில் நோயாளர்களிடம் பெறும் ரோபோ இயந்திரத்தினை கண்டுபிடித்துள்ளார்.
பாடசாலையின் அதிபரின் ஒத்துழைப்புடனும் பாடசாலை ஆசிரியர்களின் துணையுடன் கழிவுப் பொருட்களின் ஊடாக ரோபோ ஒன்றினை 2குறித்த மாணவி உருவாக்கி இருந்தார். அத்துடன் மாணவியின் கண்டுபிடிப்பு தொடர்பில் ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் மாணவி தனது தனியார் கல்லூரியின் மாணவியெனவும், தமது கல்லூரியுடாகவே தொழிநுட்ப அறிவினை பெற்று இரத்தப் பரிசோனைக்காக இரத்தத்தினை நோயாளியிடம் இருந்து பெறுவதற்கான தானியங்கி முறைமையை (AUTO NEEDELINJECTOR) கண்டுபிடித்ததாகவும் குறித்த தனியார் கல்லூரியின் இயக்குனர் அதிபரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன் இது தொடர்பில் தொலைபேசி மூலம் பாடசாலை அதிபரை தொடர்பு கொண்டு உன்னை இல்லாமல் செய்வேன் என்றும் , பாடசாலையிலிருந்து நீக்குவேன் என்பது போன்ற பல்வேறு விடயங்களை தெரிவித்து அதிபருக்கு அச்சுறுத்தல் விடுத்தாக வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார்.
இதனையடுத்து அதிபரின் முறைப்பாட்டினை பெற்றுக்கொண்ட பொலிஸார் குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.