அரசியல்வாதிகளை பொறுத்தவரையில் வார்த்தை பிரயோகம் என்பது மிகவும் முக்கியமானவொன்று அதனை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா, சாளம்பைக்குளம் கிராமத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள குப்பை மேட்டிற்கு எதிராக பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியூதீன் கடுமையான வார்த்தைப்பிரயோகத்தினை பயன்படுத்தியிருந்தார்.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பிலும், றிஷாட்டின் வார்த்தை பிரயோகம் தொடர்பிலும் எமது பிராந்திய செய்தியாளர் விநாயகமூர்த்தி முரளிதரனை தொடர்புகொண்டு வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
குப்பை கொட்டும் பிரச்சினை என்பது பரவலாக எல்லா இடங்களிலும் இருக்கும். இதற்கு அரசாங்கம் தான் சரியான தீர்வை முன்னெடுக்க வேண்டும்.
மேலும் இது போன்ற பிரச்சினை மட்டக்களப்பு, அம்பாறை போன்ற பிரதேசங்களிலும் இருந்தது. இருப்பினும் நாம் உரியவர்களுடன் கதைத்து அதனை தீர்த்துக் கொண்டோம்.
இது போன்ற பிரச்சினைகளை இனக் குரோதங்களை மறந்து எல்லோரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். மேலும் வார்த்தைப்பிரயோகம் என்பதை மிக அவதானமாக பயன்படுத்த வேண்டும்.
அரசியல்வாதிகளை பொறுத்த வரையில் வார்த்தைப்பிரயோகம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று அதனை சரியாகப் பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
வவுனியா – சாளம்பை குளம் பகுதியில் அமைந்துள்ள குப்பை மேட்டு விவகாரத்தில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவரது கருத்து மடத்தனமாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.