வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கையில் கஞ்சா போதைப்பொருள் விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் இன்று மாலை 6.30 மணியளவில் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
வேப்பங்குளம் 6ம் ஒழுங்கையில் வசித்து வரும் ஒரு குடும்பத்தினர் கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும், சிறுவர்கள் மூலம் கஞ்சா விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவித்து அவர்களின் வீட்டினை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள், இளைஞர்கள் வீதியில் இறங்கி போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் இரு தரப்பினருடனும் கலந்துரையாடி போராட்டத்தினை சுமுகமான நிலைக்கு கொண்டு வர முயன்ற போதும் குறித்த குடும்பத்தை வெளியேற்றுமாறு கோரி 6 ஆம் ஓழுங்கை வீதியை மறுத்து போராட்டம் தொடர்ந்ததால் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.
பொதுமக்கள் முற்றுகையிட்ட வீட்டினை சேர்ந்தவர்களின் ஒரு உறுப்பினர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பண்டாரிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்பாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டதாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்ததுடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியா நகரப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக பொலிஸாரினால் மீண்டும் கைது செய்யப்பட்ட நபராவார்.
மாலை 6.30 தொடங்கிய போராட்டம் 9.30க்கு நிறைவு பெற்றது. வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு வருகை தந்து குறித்த வீட்டில் கஞ்சா விற்பனை இனிமேல் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுப்பதாகவும் நாளைய தினம் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
போராட்டம் காரணமாக அப் பகுதியில் 2 மணிநேரம் பதற்ற நிலை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.