நாட்டை இரண்டாக பிளவுபடுத்த போகின்றனர். நாட்டை அமெரிக்காவின் காலனியாக மாற்ற போகின்றனர் என்று பூச்சாண்டி காட்டிய எம்.சீ.சீ. உடன்படிக்கையில் எதிர்வரும் மே மாதத்தின் பின்னர் கையெழுத்திட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில்,
குழுவை நியமித்து, மக்களின் கருத்துக்களை பெற்று எம்.சீ.சீ உடன்படிக்கையில் கையெழுத்திட தேவையான திட்டங்களை அரசாங்கம் தற்போது உருவாக்கி வருகிறது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கோரும் தற்போதைய அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்ல ஆட்சி அதிகாரமும் கிடைக்காமல் போகும்.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து மூன்று மாதங்கள் நிறைவடையப் போகின்றது. இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர அர்ப்பணிப்புக்களை செய்பவர்களின் எதிர்பார்ப்பு இல்லாமல் போகும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வந்து மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்தனர். எனினும் அவர்கள் எதிர்பார்த்த மாற்றம் நடக்கவில்லை எனவும் நாங்கள் இம்முறை வாக்களித்து ஆட்சியில் அமர்த்தியது கொள்ளை கூட்டத்திற்கு என அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்கள் பேஸ்புக் பக்கத்தில் பதிவை இட்டிருந்தனர்.
அரசாங்கத்திற்கு வாக்களித்த 69 இலட்சம் மக்கள் முகத்தை வெளியில் காட்ட முடியாமல் இருக்கின்றனர்.
பெரும்பான்மையான அரச ஊழியர்களின் வாக்குகளில் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் முதலில் அரச ஊழியர்களை ஏமாற்றியது. அடுத்ததாக படையினரையும், பொலிஸாரையும் ஏமாற்றியது.
பௌத்த சங்க சபையினரை ஏமாற்றியது. ஓய்வூதியம் பெறுவோரை ஏமாற்றியது. அதேபோல் நிவாரணங்களை வழங்குவோம்.வாழ்க்கை செலவை குறைப்போம் எனக் கூறி மக்களை ஏமாற்றியது.
கடந்த நான்கரை ஆண்டுகளில் நாங்கள் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ஏறாமல் கட்டுப்படுத்தினோம். அத்துடன் சமையல் எரிவாயு, எரிபொருட்களின் விலைகளை குறைத்து மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினோம் எனவும் அசோக அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.


















