கூட்டமைப்பில் பிளவு ஏற்பட்டமைக்கு ஊழலே முக்கிய காரணமென கருணா என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
வாழைச்சேனை- பேத்தாழை பிரதேசத்தில் நடைபெற்ற அரசியல் விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலஞ்சம் வாங்கியுள்ளதாகவும், அரசியல் இலஞ்சம் செய்வதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலாவது இடத்தில் உள்ளதாகவும் கூறிய அவர் ,இதனை தாங்கள் சொல்லவில்லை என்றும் அவர்களேதான் சொல்வதாகவும் கூறியுள்ளார்.
கடந்த காலத்தில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிக்க இரண்டு கோடி வழங்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறிதாகவும், கூட்டமைபு ஊடாக கொழும்பில் போட்டியிட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் கேட்டதாகவும், இதற்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பதினைந்து கோடி ரூபாய் பெறுமதியான சொத்தை தனக்கு வழங்க வேண்டும் என கூறியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அண்மையில் கூறியதாகவும் கருணா குறிப்பிட்டார்.
இவ்வாறு ஊழல் நிறைந்த கட்சியாக மாறியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்கின்ற கட்சியாக மாற்றமடைந்துள்ளதன் பலன்தான் இன்று கட்சி சிதறிக் காணப்படுவதற்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் இதன் காரணமாகவே தாம் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்ததகவும், எமது மக்கள் நல்ல நிலைமைக்கு வரும் வரைக்கும் எங்களது குரல் ஒலித்துக் கொண்டு இருக்கும் எனவும் அவர் இதன்போது மேலும் கூறியுள்ளார்.