தன் மேல் கைவைத்த இளைஞருக்குச் சரியான பாடம் புகட்டியதாக நடிகை டாப்ஸி பண்ணு தெரிவித்துள்ளார்.
மனோஜ் மஞ்சு நடித்த ஜும்மாண்டி மாடம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் டாப்ஸி. தமிழில், வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் டாப்ஸி.
தெலுங்கிலும் நடித்து வந்த அவர், தொடர்ந்து, வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 படங்களில் நடித்தார். இதற்கிடையே இந்தி சினிமாவுக்கும் சென்றார்.
அங்கு அவர் நடித்த, நாம் ஷபானா, பிங்க், ஜூத்வா 2 உள்ளிட்ட படங்கள் ஹிட்டாகின. இதையடுத்து அங்கு தொடர்ந்து நடித்து வருகிறார் டாப்ஸி. இப்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மித்தாலி ராஜின் வாழ்க்கைக் கதையில் நடித்து வருகிறார். இதற்காக அவர் கிரிக்கெட் பயிற்சி பெற்றுள்ளார்.
இதற்கிடையே தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் பற்றி அவர் தெரிவித்துள்ளார். தனது பின்பக்கத்தைத் தொட்ட இளைஞரை என்ன செய்தார் என்று கூறியுள்ளார், அவர். நடிகை கரீனா கபூர் தொகுத்து வழங்கும் டிவி நிகழ்ச்சி ஒன்றில் டாப்ஸி கலந்துகொண்டார். அப்போது கரீனா கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அந்த அனுபவம் பற்றி சொன்னார்.
அவர் கூறும்போது, குருநானக் ஜெயந்திக்கு நாங்கள் குருத்வாராவுக்கு செல்வது வழக்கம். அந்த நேரத்தில் அங்கு மோதிக்கொள்ளும் அளவுக்கு கூட்டம் இருக்கும். அப்போது எனக்கு ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டது. இதுபோன்ற கூட்டத்துக்குள் செல்லும்போது அதுபோன்று ஏதாவது நடக்கும் என்று உள்ளுணர்வு கூறியது.
என் உள்ளுணர்வு சொன்னது போலவே நடந்தது. ஒருவன் என் பின்பக்கத்தைத் தொட முயன்றான். இதை உடனடியாகக் கண்டுகொண்டேன். அவன் விரலை அப்படியே பிடித்துவிட்டேன். பயந்து நடுங்கினான். பிறகு சில நொடிகளில் விரலை அப்படியே பின்பக்கமாக வேகமாக மடக்கி அழுத்திவிட்டு நகர்ந்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.