சீனர்களை கொரோனா வைரஸ் அச்சம் எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்றால், நோய்த்தொற்று விலங்குகளுக்கும் பரவலாம் என்ற அச்சத்தால் செல்லப்பிராணிகள் வைத்துக் கொள்ளக் கூடாது என்று உத்தரவிடும் அளவுக்கு அவர்கள் சென்றுள்ளனர்.
சீனாவின் பல பகுதிகளில் செல்லப்பிராணிகள் வைத்துக் கொள்ளக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளதோடு, மீறி வைத்திருந்தால் அவை கொல்லப்படும் என்றும் உள்ளூர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஹுபே மாகாணத்திலுள்ள ஒரு கிராம அதிகாரிகள், மக்களே ஐந்து நாட்களுக்குள் தங்கள் செல்லப்பிராணிகளை கொன்றுவிடுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அப்படி கொல்லாவிட்டால், அதிகாரிகளே அவற்றை மொத்தமாக கொன்றுவிடுவதாக எச்சரித்துள்ளனர்.
Shaanxi என்ற மாகாணத்தில் உள்ளவர்கள், நாட்டில் நிலவும் சூழலைப் பார்த்து தங்கள் செல்லப்பிராணிகளை ’கைகழுவுமாறு’ அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சீனாவின் மூத்த தொற்று நோய் நிபுணர் ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளிகளிடமிருந்து நோய் தொற்று செல்லப்பிராணிகளுக்கு பரவலாம் என்பதால், அவற்றையும் தனிமைப்படுத்தவேண்டும் என எச்சரித்துள்ளதையடுத்து, இந்த பிரச்சனை பெரிதாகியுள்ளது.
பீஜிங், டியாஞ்சின், ஹெய்லாங்ஜியாங், ஹெபே, வுஹான், ஷான்க்ஷி மற்றும் ஷாங்காய் ஆகிய பகுதிகளுக்கும் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
ஆனால், இதுவரை கொரோனா வைரஸ் பூனைகளுக்கோ, நாய்களுக்கோ பரவியதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.