ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகத் தொடர்ந்து இருப்பதற்கும், சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய தலைவராகவும் பிரதமர் வேட்பாளராகவும் செயற்படுவதற்கும் ஐ.தே.கவின் மத்திய செயற்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எனவே, கட்சிக்குத் துரோகம் இழைக்கும் துரோகிகளைத் தூக்கியெறிந்துவிட்டு ரணிலின் கரங்களை இறுகப் பற்றிக்கொண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள சஜித் பிரேமதாஸ முன்வரவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சஜித் பிரேமதாஸவை வைத்துக்கொண்டு சுயலாப அரசியல் தேட சிலர் முனைகின்றார்கள். அதற்கு சஜித் பிரேமதாஸ ஒருபோதும் இடம்கொடுக்கக்கூடாது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவப் பிரச்சினைக்குக் கட்சியின் மத்திய செயற்குழு முடிவு கண்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பு ரணிலுக்கும், ஐ.தே.க. தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் தலைமைப் பொறுப்பு சஜித்துக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் மத்திய செயற்குழு நேர்மையுடன் செயற்பட்டுள்ளது. கட்சியின் ஒற்றுமை கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்தத் தீர்மானத்தை அவமதிக்கும் வகையில் சஜித் ஆதரவு அணியினர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள்.
இப்படியான விசமத்தனமான கருத்துக்கள் கட்சிக்குள் பிளவு இருக்கின்றது என்பதைக் காட்டுகின்றது. இது கட்சியின் பலத்தைக் குறைவடையச் செய்யும்.
இதை உணர்ந்து சஜித் செயற்பட வேண்டும். கட்சிக்குத் துரோகம் இழைப்பவர்களை சஜித் கைகழுவிவிட வேண்டும். தூய்மையான ரணிலின் கரங்களை அவர் இறுகப் பற்ற வேண்டும்.
சஜித்துக்காக எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ரணில் விட்டுக் கொடுத்தார். தற்போது ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் என்ற பதவியையும் பிரதமர் வேட்பாளர் என்ற பதவியையும் அவர் விட்டுக்கொடுக்க முன்வந்துள்ளார்.
இப்படியான விட்டுக்கொடுப்புக்களைச் செய்துள்ள ரணிலுடன் சஜித் இணைந்து செயற்பட வேண்டும். அப்போதுதான் நாடாளுமன்றத் தேர்தலில் எமது கட்சி வெற்றியைப் பெறும் என குறிப்பிட்டுள்ளார்.