கடந்த மாதம் 31ஆம் திகதி இடம்பெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததை மக்களை புறக்கணிப்பதாகவே தான் பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்,
மக்கள் பிரதிநிதிகள் என்றவகையில் மக்களுடைய அபிவிருத்தி சம்பந்தமாக முக்கியமான முடிவுகள் எடுக்கும் கூட்டம் அது. அதனை ஒரு கட்சியினர் புறக்கணித்திருந்தார்கள், மற்றவர்கள் கலந்து கொள்ளவில்லை.
தமிழர்களுடைய வரலாற்றில் புறக்கணிப்பும், போராட்டங்களும் மட்டுமே வரலாறாக இருந்துள்ளது. இதில் கலந்துரையாடல்களும் இணைந்திருந்தால் நிச்சயமாக நிறைய விடயங்களை பெற்றிருக்க முடியும்.
இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொள்ளாததை மக்களை புறக்கணிப்பதாகவே நான் பார்க்கின்றேன்.
அபிவிருத்தி என்பது மக்கள் சார்ந்த விடயம், மக்கள் பிரதிநிதிகளாக, கடந்த அரசாங்கத்தில் செய்யப்பட்ட வேலைத்திட்டங்களுக்கு இன்னும் பணம் கிடைக்காமல் இருந்தால் அதை பற்றி கூட பேசுவதற்கு வராதவர்கள் எப்படி மக்களுக்கான வேலைத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்திகளை கொண்டுபோய் சேர்க்கப்போகின்றார்கள் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது என அவர் கூறியுள்ளார்.
இந்நிகழ்வில் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் எஸ். சுதர்சன், திணைக்கள உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.