அரியாலை – உதயபுரம் பகுதியில் சட்டவிரோதமான மணல் அகழ்வு நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
தனியார் காணிகளுக்குள் அத்துமீறி நுழையும் மணல் கொள்ளையர்கள் வீட்டு உரிமையாளரை அச்சுறுத்தி இரவு நேரங்களில் உழவு இயந்திரங்கள் மூலம் வாகனங்கள் சகிதம் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவதாக காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய விசேட பொலிஸ் குழுக்கள் அரியாலை, உதயபுரம், பூம்புகார் மற்றும் நாவலடி பகுதியில் 24 மணிநேரமும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளது.
குறித்த பகுதிக்கு சென்ற யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர் மணல் அகழ்வில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய முற்பட்ட போதும் அவர்கள் இன்றைய தினம் மணல் அகழ்வில் ஈடுபட்டு இருக்கவில்லை.
மாறாக அவர்கள் பொலிசார் வருவதை அறிந்து கொண்டே குறித்த பகுதியில் இருந்து தப்பிச் சென்றிருக்கலாம் என்று பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
உதயபுரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவதனால் கடல் நீர் நிலத்தில் புகும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக எதிர்காலத்தில் குறித்த பகுதியில் நன்னீர் உவர் நீராக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.