ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவிக்கு வந்த பின்னர் முன்னாள் இராணுவ அதிகாரிகள் பலர் மீண்டும் அரச நிர்வாகத்துக்குள் உள்வாங்க ஆரம்பிக்கப்பட்டனர்.
மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்புச் செயலாளராக முதலில் நியமிக்கப்பட்டார். கடைசியாக மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி பலநோக்கு அபிவிருத்தி செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கின்றார். சிறைச்சாலைகள் ஆணையாளர் பதவி உள்ளிட்ட பல பதவிகளுக்கு முன்னாள் இராணுவ அதிகாரிகள் பலர் நியமிக்கப்படும் வாய்ப்புக்கள் இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்று இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் பல்வேறு உயர் பதவிகளுக்கான நியமனங்களை மேற்கொண்டிருந்தாலும் சில முக்கியமான உயர் பதவிகளுக்கான நியமனங்கள் விடயத்தில் இராணுவப் பின்னணி கொண்டவர்களையே தெரிவு செய்திருக்கின்றார்.
பாதுகாப்புச் செயலாளர் பதவி, தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு தலைவர் பதவி, அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் பதவி, விமான நிலைய மற்றும் விமான சேவைகள் அதிகாரசபை தலைவர் பதவி, துறைமுக அதிகாரசபைத் தலைவர் பதவி, ஜனாதிபதி செயலக பிரதானி பதவி போன்ற பல பதவிகளுக்கு முன்னாள் அல்லது சேவையில் உள்ள இராணுவ அதிகாரிகளே நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
பாதுகாப்புடன் தொடர்புடைய பதவிகளுக்கு இராணுவப் பின்னணி கொண்டவர்கள் நியமிக்கப்படுவதில் நியாயப்பாடுகள் இருந்தாலும் அரச நிர்வாக அமைப்புக்களில் இராணுவப் பின்னணி கொண்டவர்களின் நியமனங்கள் இடம்பெற்றிருப்பது வேறு விதமான தோற்றத்தையே காண்பிக்கும்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போதே அவர் ஆட்சிக்கு வந்தால் இராணுவ நிர்வாகம் தான் நாட்டில் நடக்கும் என்றும் இராணுவ ஆட்சிக்குள் நாடு அகப்படும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியினர் பிரசாரங்களை மேற்கொண்டிருந்தனர்.
கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரும் இராணுவ ஆட்சிக்குள் நாடு சென்று கொண்டிருக்கின்றது என்ற விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தாலும் அவ்வாறான விமர்சனங்களோ, குற்றச்சாட்டுக்களோ கவனத்தில் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சியின் நியமனத்தின் மூலம் அரச நிர்வாகத்தில் இராணுவப் பின்புலம் கொண்டவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் விடயத்தில் ஜனாதிபதி கோட்டாபய உறுதியாக இருக்கின்றார் என்பது வெளிப்படையாகியுள்ளது.
பலநோக்கு அபிவிருத்தி செயலணிதான் தற்போதைய அரசாங்கத்தின் முக்கியமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க கண்காணிக்கப் போகிறது.
அதற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி, முன்னர் இராணுவத் தலைமை அதிகாரியாக இருந்தவர், சட்டம், ஒழுங்கு அமைச்சு, விளையாட்டுத் துறை அமைச்சுக்களின் செயலாளராகவும் பதவி வகித்தவர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப்போரை ஆரம்பித்து வைத்தவரும் இவர்தான்.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்திருந்த போது பதில் இராணுவத் தளபதியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி தான் 2006இல் மாவிலாறில் நான்காவது கட்ட ஈழப்போரை ஆரம்பித்து வைத்தவர்.
இராணுவ சேவையின் மீது காட்டிய அர்ப்பணிப்புக்கான பிரதிபலனாகவோ அல்லது அவரது நிர்வாகத் திறனுக்காகவோ பலநோக்கு அபிவிருத்தி செயலணியின் பணிப்பாளராக அவர் நியமிக்கப்பட்டிருக்கலாம்.
எவ்வாறாயினும் அவரது நியமனம், முன்னாள் இராணுவ அதிகாரிகளின் ஆதிக்கம், சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் அதிகரிக்கிறது என்ற கருத்தையே வலுப்படுத்தியிருக்கின்றது.
அதுவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முக்கியமான திட்டமாக கருதப்படும் வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு அரசாங்க வேலை வழங்கும் திட்டத்தைச் செயற்படுத்தும் பொறுப்பும் கூட இவரிடமே வழங்கப்பட்டிருக்கின்றது.
பிரதேச ரீதியாக இந்த வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகளில் அரச அதிகாரிகளுடன் இராணுவ அதிகாரிகளும் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.
முற்றிலும் தகுதியானவர்களைக் கண்டறிந்து நியமனங்களை மேற்கொள்வதுதான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இந்த முடிவுக்குக் காரணம் என்று சொல்லப்படுகின்றது.
அதேவேளை இன்னொரு பக்கத்தில் அரச சிவில் நிர்வாக கட்டமைப்புக்களில் இராணுவ ஆதிக்கம் அல்லது செல்வாக்கிற்கு வழிகோலும் ஆபத்து இருப்பதை மறந்து விடலாகாது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 1 இலட்சம் பேருக்கு அரசாங்க வேலை அளிக்கும் திட்டத்தை செயற்படுத்தும் பொறிமுறைக்குள் இராணுவ அதிகாரிகள் உள்ளடக்கப்படுவதற்கு முன்னோடியாக இருந்தவர் மேஜனர் ஜெனரல் லறி விஜேரத்னதான்.
யாழ்ப்பாணக் குடாநாடு புலிகளிடம் இருந்து 1996ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்டதை அடுத்து வடமராட்சி பிரதேசத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இராணுவத்தின் 524ஆவது பிரிகேட்டின் கட்டளை அதிகாரியாக இருந்தவர்தான் பிரிகேடியர் லறி விஜேரத்ன.
வடமராட்சியில் கைப்பற்றப்பட்ட பிரதேசத்தில் புலிகளின் கெரில்லா நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக அவர் பல்வேறு யுக்திகளை கையாண்டார். அபிவிருத்தி திட்டங்கள், மக்களுடன் நெருங்கி பழகுதல், அரசாங்க நியமனங்களையும் சிவில் நிர்வாக நடவடிக்கைகளையும் கைக்குள் வைத்துக் கொள்ளுதல் இவை மூன்றும் அவரது பிரதான யுக்திகளாக இருந்தன.
அப்போது யாழ்ப்பாணத்தில் அரசியல் கட்சிகள் பெரிதாக செயற்படுகின்ற நிலையில் இருக்கவில்லை என்பதும் குடாநாட்டுக்கு வெளியே தான் புலிகளுடன் போர் நடந்து கொண்டிருந்தது என்பதும் அவருக்கு சாதகமானதாக இருந்தது.
சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்தினால் அப்போது அறிமுகப்படுத்தப்பட்ட சமுர்த்தி திட்டம், யாழ்ப்பாண மாவட்டத்திலேயே முதன்முதலில் வடமராட்சிப் பகுதியில்தான் கொண்டு வரப்பட்டது.
சமுர்த்தி அதிகாரிகளை தெரிவு செய்வது நியமனம் செய்வது எல்லாவற்றையும் அப்போது வடமராட்சிப் பகுதிக்குப் பொறுப்பான அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் லறி விஜேரத்னவே தனது பொறுப்பில் மேற்கொண்டார்.
அது அவருக்கும் புதிய நியமனங்களைப் பெற்றவர்களுக்கும் இடையில் ஒரு பிணைப்பை ஏற்படுத்தியது.
அதுவே அவர் மீது புலிகள் கரும்புலித் தாக்குதல் நடத்துவதற்கும் காரணமாக அமைந்திருந்தது.
அரசாங்க நியமனங்களில் இராணுவ அதிகாரிகளின் தலையீடுகள் என்பது இன்று நேற்று பரீட்சிக்கப்பட்ட அல்லது ஆரம்பிக்கப்பட்டதல்ல. அது 1996 – 97இலேயே தொடங்கி விட்டது.
அதுபோல வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆளுநர்களாக பணியாற்றிய இராணுவ அதிகாரிகளும் கூட அரச நியமனங்கள், நிர்வாகங்களில் தலையீடுகளைச் செய்பவர்களாகவே இருந்து வந்தனர்.
அந்த தலையீடுகள் அப்போது உயர்மட்டத்தில் இருந்தது. ஆனால் அது இப்போது பிரதேச மட்டம் வரை கொண்டு செல்லப்படப் போகிறது.
இது இராணுவத்தினருக்கும் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கும் இடையிலான தொடர்பாடலை அதிகரிக்கும். அதேவேளை, சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவத் தலையீடுகள் என்ற வலுவான குற்றச்சாட்டுக்கள் எழும்பவும் வழிவகுக்கும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது நிர்வாகத்தில் முக்கிய பதவிகளுக்கு இராணுவ அதிகாரிகளை தெரிவு செய்வதும் நியமிப்பதும் இராணுவ ஆட்சியை நோக்கி நாட்டைக் கொண்டு செல்வதான குற்றச்சாட்டுக்களை ஏற்படுத்தியிருந்தாலும் அந்த முடிவில் அவர் பின்வாங்கவில்லை.
ஊழல் இல்லாத செயற்திறன்மிக்க நிர்வாகத்தை இராணுவப் பின்புலம் கொண்டவர்களால் தான் வழங்க முடியும் என்று அவர் நம்புகின்றார். அது அவரது பலம் என்பதா பலவீனம் என்பதாக என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
ஏனென்றால் இராணுவ அதிகாரிகளால் தான் எல்லாவற்றையும் சீரமைக்க முடியும் என்ற நிலைப்பாடு தவறானது. அது அரச நிர்வாக இயந்திரத்தில் உள்ள சிவில் அதிகாரிகளை அவமானப்படுத்தும் விதத்திலும் இருக்கின்றது.
அவர்களை திறமையற்றவர்களாக ஊழல் செய்பவர்களாக அடையாளப்படுத்தக் கூடியது. சிலர் அவ்வாறானவர்களாக இருக்கலாம். அதற்காக ஒட்டுமொத்த சிவில் நிர்வாக கட்டமைப்பும் அவ்வாறானதல்ல. சிவில் நிர்வாக செயற்பாடுகளில் இராணுவ பின்புலம் கொண்ட அதிகாரிகளின் மீது ஜனாதிபதி வைக்கும் நம்பிக்கை சிவில் அதிகாரிகளின் நம்பிக்கையீனத்தை சேர்த்தே சம்பாதிக்கின்றது.
சிவில் அதிகாரிகள் தங்கள் அதிகாரங்கள் பறிக்கப்படுவதையோ தாம் இரண்டாம் நிலைப்படுத்தப்படுவதையோ விரும்பமாட்டார்கள்.
அதேவேளை சிவில் நிர்வாக கட்டமைப்பில் முழுமையான இராணுவ ஆதிக்கம் ஏற்படுமானால் அது சர்வதேச அளவில் இலங்கைக்கு நன்மையைப் பெற்றுக் கொடுக்காது.