தமிழ் மக்களின் விடிவுக்காக உள்ளத்தூய்மையுடன் செயற்படும் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெறுமனே ஆசனத்திற்காக செயற்படமுடியாது என தெரிவித்துள்ள அவர், தாங்கள் விட்டுக்கொடுப்புக்கு தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மட்டு. ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
எமது கட்சியின் மட்டக்களப்பு நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கோவிந்தம் கருணாகரம் மற்றும் எமது கட்சியின் மட்டக்களப்பு இளைஞர் குழுவின் தலைவர் சட்டத்தரணி நவரெட்ணராஜா கமல்தாஸ் ஆகியோரை நியமிப்பதென மாவட்டப் பொதுச்சபை கூடி ஏகமனதாக தீர்மானித்துள்ளோம்.
தமிழீழ விடுதலை இயக்கம் என்பது இன்றைக்கும் அரசியற் களத்தில் இருந்து கொண்டிருக்கின்றது. போராட்ட காலத்தில் சகோதரப் படுகொலைகள் மூலம் தமிழீழ விடுதலை இயக்கம் முற்றாக அழிந்து விட்டது எனப் பலரும் நினைத்த காலகட்டமும் இருந்தது.
ஆனால் அதன் பின்பும் நாங்கள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து அரசியல் ரீதியில் எமது கடமைகளை மேற்கொண்டோம்.
ஒற்றுமையின் நிமித்தமும், ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் எந்தவொரு அமைப்பாக இருந்தாலும் அதனைப் பலவீனப்படுத்தக் கூடாது என்ற இரு காரணங்களுக்காகவுமே எமது செயற்பாடு அவ்வாறு இருந்தது.
எனவே ஒற்றுமை தொடர்பில் தமிழீழ விடுதலை இயக்கம் பெரும் வரலாற்றைக் கொண்டது. இதில் யார் இருக்கின்றார்களோ இல்லையோ தமிழீழ விடுதலை இயக்கம் அதன் பயணத்தைத் தொடரும்.
எம்மில் இருந்து விலகிச் சென்றவர்களால் நாம் பலவீனமாகிவிட்டோம் என்ற எண்ணம் எங்களைப் பொருத்தமட்டில் இல்லை.
தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் தலைமை பற்றி அண்மையில் பலரும் பலவாறு சொல்லிக் கொண்டு வருகின்றார்கள். அது அவரவர்களின் தனிப்பட்ட கருத்துக்களேயன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்து அல்ல.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மூன்று கட்சிகள் இருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையைத் தெரிவு செய்வதில் மூன்று கட்சிகளுக்கும் பங்கு இருக்கின்றது.
எனவே எமது மூன்று கட்சிகளும் இணைந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரைத் தெரிவு செய்கின்ற பொறுப்புடன் இருக்கின்றோம்.
தற்போதைய ஜனாதிபதி ஒரு இனவாத அடிப்படையில் சிங்கள மக்களின் அனுமதியுடன் தான் எந்த முடிவுகளையும் எடுக்க முடியும் என்பதைத் தெளிவாக நாடாளுமன்றில் கூறியிருக்கின்றார்.
இந்த அரசாங்கமும் பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்ற ரீதியில் தமிழ், முஸ்லீம், மலையக மக்களின் சிந்தனைகளை அல்லது அவர்கள் சிங்கள மக்களைப் போன்று அத்தனை உரித்துக்களும் கொண்ட இனம் என்பதை கருத்திற்கொள்ளாத வகையில் செயற்படுகின்றது.
தற்போது கூடுதலாக சோதனைச் சாவடிகள் முளைத்திருக்கின்றன. அரச பணிகளில் கூடுதலாக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் அமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறான செயற்பாடுகளை ஜனாதிபதியும், இந்த அரசாங்கமும் செய்து வருகின்றது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பெரும்பான்மை இன வேட்பாளருக்கு வாக்களித்து எமது மக்கள் தாம் இனவாதிகள் இல்லை என்பதை நிரூபித்திருக்கின்றார்கள்.
இதன்போது எமது வடக்கு, கிழக்கு மக்கள் ஓரணியில் நின்று காட்டியிருக்கின்றார்கள். இதனை ஜனாதிபதி அவர்களும் விளங்கிக் கொளள வேண்டும். இந்த நாட்டில் சகல உரித்துக்களும் கொண்ட தமிழ் பேசும் மக்களுடைய பிரச்சினைகளை அவர் கையாள வேண்டும்.
வெறுமனே சிங்கள மக்களின் வாக்குகளை மாத்திரம் மையமாக வைத்து அவர்கள் எதனையும் சாதித்துவிட முடியாது. தமிழ் மக்கள் ஐக்கியமான இந்த நாட்டுக்குள்ளே எமது பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றார்கள்.
தமிழிலே தேசிய கீதம் பாடப்படக்கூடாது என்கின்ற விடயம் இந்த நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்களை வேறு நாட்டுப் பிரஜைகள் போல் கருதுவதாகவே தெரிகின்றது.
எங்களுக்கும் தமிழிலே தேசிய கீதம் இருக்கின்றது. அதனைப் பாடுவதற்கு தூண்டுவதாகவே இது அமைகின்றது. தேசிய கீதம் தமிழில் பாடப்பட வேண்டும். சிங்கள மொழிக்கு இருக்கின்ற அத்தனை உரித்துக்களும் தமிழ் மொழிக்கும் இருக்கின்றது.
அந்தவகையில் தேசிய கீதத்தைச் சிங்களத்தில் மாத்திரம் பாட வேண்டும் என்று திணிப்பது மனித உரிமை மீறலாகும். இதன்மூலம் மீண்டும் ஒரு சர்ச்சையை உண்டாக்குவதற்கான உருவாக்கத்தை ஏற்படுத்திவிட வேண்டாம்.
முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைவதென்பது வரவேற்கக்கூடிய விடயம். அவ்வாறு இணையும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் 22 ஆசனங்களை சுலபமாகப் பெற முடியும்.
ஏனெனில் மக்கள் ஒற்றுமையை மிகவும் விரும்புகின்றார்கள். உள்ளே வந்து நாட்டாமைத் தனம் அல்லது மற்றவர்களை அனுசரிக்காத தன்மையை உண்டுபண்ணிவிடக் கூடாது.
அந்த வகையிலே எல்லாரையும் அனுசரித்தச் செல்லக் கூடிய ஒரு நிலையினை மனதில் மக்களின் விடிவு என்ற ஒன்றை எண்ணி இருப்பவர்கள் ஏற்படுத்த வேண்டும். வெறுமனே ஆசனத்திற்காக நாங்கள் செயற்பட முடியாது என தெரிவித்துள்ளார்.