ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான கூட்டணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிட பெரும்பான்மையானவர்களின் விருப்பம் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
58 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து தேர்தலில் போட்டியிடும் சின்னம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
யானைச் சின்னத்தில் போட்டியிடவே இவர்கள் அனைவரும் விரும்புகின்றனர். மேலும் 19 நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்தை மாத்திரமே அறிய வேண்டியுள்ளது.
வரலாற்றில் பொது வேட்பாளரை நிறுத்தும் போது மாத்திரமே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான கூட்டணி அன்னப் பறவை சின்னத்தில் போட்டியிட்டது.
பொதுத் தேர்தல்களில் யானைச் சின்னத்திலேயே போட்டியிட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


















